சந்திரயான் 2 குறித்து மோடி பெருமிதம்

டெல்லி, செப்டம்பர்-6

சந்திரயான்–2 திட்டம் இந்தியாவின் சிறந்த திறமையை வெளிப்படுத்துவதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்கள் பயனடைவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நாளை செப்டம்பர்-7ம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிரக்கப்படுகிறது. இந்த செயல் இந்திய விண்வெளி மையத்திற்கு மிகப்பெரும் சவாலாகவே இருக்கும். இந்த நிலையில், சந்திரயான் நிலவில் தரையிரங்கும் காட்சியை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடவுள்ளார். இதற்காக, இஸ்ரோ மையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சந்திரயான் 2 திட்டம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி டூவிட் செய்துள்ளார்.

அதில், சந்திரயான் 2 நிலவில் தரையிரங்கும் தருணத்திற்காக இந்தியாவின் 130 கோடி மக்களும் ஆர்வமுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார். சில மணி நேரங்களில் நடைபெறும் இந்த நிகழ்வுக்காக இந்தியர்கள் மட்டுமின்றி மற்ற நாடுகளின் விஞ்ஞானிகளும் எதிர்நோக்கி இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்

இஸ்ரோவின் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை காண்பதை நினைத்து உற்சாகமடைந்துள்ளதாக கூறியுள்ள பிரதமர் மோடி, விண்வெளி தொடர்பான வினாடிவினா போட்டியில் தேர்வாகி தன்னுடன் இணைந்த அந்த காட்சியை காணவிருக்கும் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அறிவியல் மற்றும் விண்வெளி மீதான இளைஞர்களின் ஆர்வத்தை எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அறிகுறி தான் இது எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டது முதல் இதுநாள் வரை அன்றாட தகவல்களை ஆர்வத்துடன் அறிந்து கொள்வதாக தெரிவித்துள்ள மோடி, இத்திட்டமானது, இந்தியர்களின் திறமைகளையும், உறுதியையும் வெளிப்படுத்தி இருப்பதாகவும் நெகிழ்ந்துள்ளார்.

சந்திரயான் 2 திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் இந்தியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், சிறப்பான தருணத்தை அனைவரும் பார்த்து, அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *