புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது.. நாராயணசாமி திட்டவட்டம்

புதுச்சேரி அரசுக்குப் பெரும்பான்மை உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, பிப்-16

நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி நாளை புதுச்சேரி வரும் சூழலில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்கள் அரசுக்குப் பெரும்பான்மை உள்ளது. அரசியல் சட்ட விதிமுறைகளின்படி செயல்படுவோம். புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது. இந்திய அரசியல் சாசன சட்டப்படி புதுச்சேரி அரசு செயல்படும். புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது. பெரும்பான்மையை நிரூபிப்போம்” எனத் தெரிவித்தார்.

புதுச்சேரி காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததால் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளார்களே எனக் கேட்டபோது, “எதிர்க்கட்சிகள் அப்படித்தான் கூறுவார்கள். எங்கள் அரசுக்கு மெஜாரிட்டி உள்ளது” எனத் தெரிவித்தார்.

அரசு கொறடா அனந்தராமன் கூறுகையில், “எங்களிடம் இருந்து இரு எம்எல்ஏக்கள் அங்கு சென்றால், அங்கிருந்து (எதிர்க்கட்சிகளிடமிருந்து) இரு எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு வருவார்கள்” என்று தெரிவித்தார்.

தற்போது புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுத் தரப்பில் 14 எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சிகள் தரப்பில் 14 எம்எல்ஏக்களும் உள்ள சரிசமமான சூழலே நிலவுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *