2009 மக்களவை தேர்தலில் ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2009 ஆம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை, பிப்-16

சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ப.சிதம்பரமும், அதிமுக சார்பில் ராஜ கண்ணப்பனும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ கண்ணப்பனை விட 3 ஆயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். இதனையடுத்து இந்த தேர்தலில் ப.சிதம்பரம் பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி ராஜ கண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார்.

ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை இறுதியாக நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்த நிலையில், அனைத்து தரப்பு விசாரணையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே முடிவடைந்தது. இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, 2009 ஆம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும். மேலும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி ராஜகண்ணப்பனின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *