குலதெய்வ கோயிலில் 108 கிடா வெட்டி விருந்துடன் நடைபெற்ற சீமான் மகன் காதணி விழா

‘‘பிரதமர் மோடி அறிவித்தது எல்லாம் சும்மா வெறும் வெற்று அறிவிப்பு தான்’’ என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்தார்.

காளையார்கோவில், பிப்-16

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே முடிகரை கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலான வீரகாளியம்மன் கோயிலுக்கு நேற்று குடும்பத்துடன் வந்திருந்தார். அங்கு அவரது மகன் பிரபாகரனுக்கு காதணி விழா நடைபெற்றது. இதையொட்டி 108 கிடா வெட்டி விருந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நெல் மூடைகளை வாங்கி விற்பவனும், தவிடாக்கியவனும் கூட பணக்காரர்களாக இருக்கின்றனர். ஆனால் விளைவித்தவன் கடனாளியாக இருக்கிறான்.ஒவ்வொரு முறையும் பயிர்க் கடனை தள்ளுபடி செய்தாலும் விவசாயி கடனாளியாகவே தொடர்வான். அடிப்படையில் உள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டும்.உழவன் உற்பத்தி செய்த பொருளுக்கு, அவரே விலை நிர்ணயிக்க வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள் எல்லாம் சும்மா வெறும் வெற்று அறிவிப்பு தான்.

மதுரையில் ரூ.20 லட்சம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கினார். இதுவரை வரவில்லை. அதேபோல் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையும் வெற்று அறிவிப்பாக தான் உள்ளது.நிதி இருக்கிறது என்றால் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை ஏன்? நிறுத்த வேண்டும். மத்திய அரசு செய்வதெல்லாம் ஏமாற்று வேலை. அதிமுக ஆட்சியில் தமிழகம் வெற்றிநடை போடாது. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தான் வெற்றி நடைபோடும்.

சுப்ரமணியசாமி சொன்னதுபோல் ராவணன் நாடு, சீதை நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக தான் இருக்கு. ஆனால் ராமன் நாட்டில் தான் விலை அதிகமாக உள்ளது. கச்சா விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது என்பதை மாற்ற வேண்டும். அன்று இருட்டில் முகமூடி போட்டு கத்தியைக் காட்டி ராக்கொள்ளையன் கொள்ளையடித்தான். தற்போது சுங்கச்சாவடியில் கட்டையைக் குறுக்கே போட்டு பகலில் கொள்ளை அடிக்கின்றனர். இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை.

இவ்வாறு சீமான் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *