தமிழகத்தில் இருந்து ஜெருசலேமுக்கு இனி 1000 பேர் செல்லலாம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணத்திற்கு ஆண்டுதோறும் இனி 1,000 பேர் செல்லலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை, பிப்-16

கோவை, ‘கொடிசியா’ மைதானத்தில், தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பு மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கிறிஸ்தவ மதத்தினரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றி தரப்படும். ஜெருசலம் பயணத்துக்கு, அரசு சார்பில் 500 பேர் அனுப்பப்பட்டு வந்த நிலையில், 2018-19 முதல், 600 பேராக உயர்த்தப்பட்டது. இனி, 1,000 பேராக உயர்த்தப்படுவர். பயண செலவு, 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த விதவை பெண்களுக்கு மாவட்டந்தோறும் உதவும் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஒரு சங்கத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் என, ஆண்டுதோறும், 20 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.நாட்டிலேயே சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பதில் தமிழகம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலிடம் பிடித்து விருது பெற்றுள்ளது. இதனால், யாரும் அச்சப்பட தேவையில்லை. கொள்கை என்பது எப்போதும் நிலையானது. தேர்தல்கள் வரும், போகும்; கொள்கை எப்போதும் மாறாது. இதை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். அவரவரின் மதம் அவரவருக்கு பெரியது.மற்ற மதத்தை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். கடவுள் என்பது ஒன்று தான். ஒருவரின் நம்பிக்கையில் மற்றவர்கள் குறுக்கிடுவதை அ.தி.மு.க., அரசு ஏற்காது. எங்கள் கட்சி ஓட்டுக்காக இல்லை; மக்களுக்கானது. இந்த அரசை உங்களுடைய அரசாக எண்ணுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *