அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட இறுதிக்கெடு…

சென்னை, அக்டோபர்-31

போராடும் மருத்துவர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவை காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது: போராட்டத்தில் உள்ள மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். அதை ஏற்று 1,550 பேர் பணிக்குத் திரும்பி, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளனர். 3,127 பேர், இன்று நண்பகல் 12 மணி வரை போராட்டத்தில் இருக்கின்றனர்.

15 மாவட்டங்களில் போராட்டமே நடைபெறவில்லை. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 15,000 பேர் போராட்டத்தில் இருக்கின்றனர் என்ற செய்தி தவறானது. ஏழை, எளிய மக்களின் சிகிச்சைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். மக்கள் நலன் கருதி பணிக்குத் திரும்பிய மருத்துவர்களுக்கு நன்றி.

மருத்துவமனை வளாகம் போராட்டக்களம் அல்ல. அரசு கனிவுடன் கோரிக்கைகளை கேட்கிறது. கோரிக்கைகளை அரசு நிராகரிக்கவில்லை. சலுகைகளை அரசு கொடுத்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் மருத்துவர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை எங்களிடம் மருத்துவர்கள் வலியுறுத்தினர். அவர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுப்போம் என அரசு உறுதியளித்திருக்கிறது. இன்றைக்குள் மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் அந்த இடங்கள் காலிப் பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டு, புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என திட்டவட்டமாகக் கூறுகிறேன். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *