சென்னை,மும்பை நகரங்கள் 2050ல் கடலில் மூழ்கும் ஆபத்து
வாஷிங்டன்.அக்டோபர்.31
கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதன் காரணமாக சென்னை,மும்பை,சூரத் உள்ளிட்ட 7 நகரங்கள் 2050 ஆண்டில் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தனியார் அமைப்பான க்ளைமேட் சென்ட்ரலின் ஆராய்ச்சியாளர்கள் ஸ்காட் ஏ. குல்ப் மற்றும் பெஞ்சமின் எச். ஸ்ட்ராஸ் தலைமையில் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவில் இந்தியா உள்ளிட்ட 75 சதவீத ஆசிய நாடுகள் பேராபத்தை எதிர்கொண்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதன் காரணமாக 2050 ஆம் ஆண்டில்,மும்பை, சூரத், சென்னை மற்றும் கொல்கத்தாவின் பகுதிகள் கடலுக்கடியில் அல்லது தொடர்ச்சியான வெள்ளத்தால் தண்ணீரில் மூழ்கம் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்பன் உமிழ்வு காரணமாக அதிகரிக்கும் வெப்பநிலை துருவங்களில் உள்ள பனி உருக வழிவகுக்கிறது. இதனால் உலகெங்கிலும் கடல் மட்டங்கள் உயர்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2050 ஆம் ஆண்டில் கடலோரப் பகுதிகளில் வாழ்கின்ற 31 கோடி மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழக்க கூடும் என்றும் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 35 கோடியாக உயர்ந்து 2100 ஆம் ஆண்டில் 51 கோடி மக்கள் பேராபத்தை எதிர் நோக்கி உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனா, இந்தியா, வங்கதேசம், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய எட்டு ஆசிய நாடுகளின் கடோலர தாழ்வானப் பகுதிகள் நீருக்குள் மூழ்கும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்று ஆராய்ச்சி முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.