சொந்த மண்ணில் அஷ்வின் அபார சதம்.. இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம்..!!
அஷ்வின் அபார சதம் அடித்ததால், இந்தியா 2-வது இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆக, இங்கிலாந்து வெற்றிக்கு 482 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை, பிப்-15

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்தது. முதல் பந்தில் இருந்து சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகள் டர்ன் ஆக ஆரம்பித்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க கஷ்டப்பட்டனர். என்றாலும் ரோகித் சர்மா 161 ரன்களும், ரஹானே 67 ரன்களும், ரிஷப் பண்ட் 58 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி 4 விக்கெட்டும், ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 134 ரன்னில் சுருண்டது. அஷ்வின் ஐந்து விக்கெட் எடுத்து அசத்தினார். இங்கிலாந்து அணியில் பென் போக்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார்.
195 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், இந்திய பேட்ஸ்மேன்கள் 2-வது இன்னிங்சில் திணறினார்கள். ஒரு கட்டத்தில் இந்தியா 106 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது. ஷுப்மான் கில் (14), ரோகித் சர்மா (26), புஜாரா (7), ரஹானே (8), ரிஷப் பண்ட் (10) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
7-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் அஷ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. விராட் கோலி அரைசதம் அடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 96 ரன்கள் சேர்த்தது.
மறுமுனையில் அஷ்வின் அபாரமாக விளையாடி 134 பந்தில் சதம் விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில் அஷ்வினின் ஐந்தாவது சதம் இதுவாகும். தொடர்ந்து விளையாடிய அவர் 106 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா 2-வது இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் ஜேக் லீச், மொயீன் அலி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
ஒட்டுமொத்தமாக இந்தியா 481 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.
இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி, வழக்கம்போல இந்திய அணியின் சுழற்பந்துவீச்சில் தடுமாறியது. டாம் சிப்லி, அக்ஷர் படேல் பந்துவீச்சில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். 4 பவுண்டரிகள் அடித்த ரோரி பர்ன்ஸ், 25 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நைட் வாட்ச்மேனாகக் களமிறங்கிய லீச், ரன் எதுவும் எடுக்காமல் அக்ஷர் படேல் பந்துவீச்சில் வீழ்ந்தார். 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. லாரன்ஸ் 19, ரூட் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

இங்கிலாந்து அணிக்கு 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 429 ரன்கள் பின்தங்கியுள்ளது.