சமையல் கேஸ் விலை ரூ.50 உயர்வு.. சென்னையில் கேஸ் சிலிண்டர் ரூ.785-ஆக நிர்ணயம்
டெல்லி, பிப்-15

மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலையை இந்த மாதத்தில் 2-வது முறையாக உயர்த்தி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்துள்ளன. இந்தப் புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்ட நிலையில், 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 75 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 4-வது முறையாக மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படுகிறது. இதன்படி, டெல்லியில் மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ.769 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இந்த மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 50 உயர்த்தப்பட்டு ரூ.785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படும் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் ரூ.75 அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து, சமையல் சிலிண்டர் மானியம் பெறும் மக்களுக்கும் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணத்தை மத்திய அரசு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.