தேர்தல் களத்தில் அதிரடியாக இறங்கிய அதிமுக… ஜெயலலிதா பிறந்த நாளில் விருப்ப மனு விநியோகம்..!

அதிமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர்.

சென்னை, பிப்-15

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு வருகிற ஏப்ரல் மாதம் கடைசியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் அ.தி.மு.க.- தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அ.தி.மு.க.வின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகிற 24-ந்தேதி (புதன்கிழமை) முதல் மார்ச் மாதம் 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப கட்டண தொகையை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்ப படிவங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக்கழகத்தில் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்க கட்டணம் ரூ.15 ஆயிரம் ஆகும்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் விருப்ப மனு கொடுக்க கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆகும்.

கேரள சட்டசபை தேர்தலில் விருப்ப மனு கொடுக்க கட்டணம் ரூ. 2 ஆயிரம் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *