எடப்பாடி பழனிசாமியுடன் தனியாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி

நேரு உள்விளையாட்டு அரங்கில், விழா நிறைவடைந்த பின் சுமார் 10 நிமிடங்கள் தனியாக பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, பிப்-15

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.4,486 கோடி செலவில் நிறைவுற்ற பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்று பேசினர். பின்னர் பிரதமர் மோடி பேசினார்.

விழா முடிவில் பிரதமர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் கைகளை உயர்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக வருகிற சட்டமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக வெளிப்படையான பேச்சு வார்த்தைகள் இன்னும் நடைபெறவில்லை. கடந்த முறை பாஜக தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா சென்னை வந்தபோதுதான் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியானது.

இதனையடுத்து, விழா நடந்து முடிந்த பின்னர் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்து பேசினார். பிரதமருக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அறையில் பிரதமரும், முதல்வரும் சந்தித்து பேசினர். 10 முதல் 15 நிமிடங்கள் வரை முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி உள்ளார். இதில், அதிமுக – பாஜக கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், முதல்வர் பிரதமர் இடையேயான ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *