பாமர மக்களின் சேவகர் பிரதமர் மோடி… ஓ.பி.எஸ். புகழாரம்

பிரதமர் மோடி இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் என்று சென்னையில் நடந்த அரசு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டினார்.

சென்னை, பிப்-15

சென்னையில் நேற்று நடைபெற்ற மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கம் உட்பட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இவ்விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுப் பேசும்போது கூறியதாவது:-

மத்திய – மாநில அரசுகளின் கூட்டுமுயற்சிக்கும் இணக்கத்துக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் நல்லதொரு உதாரணம். மத்திய பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் பல வளர்ச்சிகளை காண முடியும் என்பதற்கு இங்கு தொடங்கி வைக்கப்படும் பல்வேறு திட்டங்களே எடுத்துக்காட்டு. இந்த ஆக்கப்பூர்வமான கூட்டுசெயல்பாடு தமிழகத்தை இன்னும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும்.

பிரதமர் மோடி மிகவும் தைரியமிக்க ஒரு தலைவர். நாட்டுக்கு தொண்டாற்ற தன்னையே அர்ப்பணித்துள்ளார். இத்தகைய தலைவர்களை இப்போதெல்லாம் காண்பது மிகவும் அரிது. மோடியை பிரதமராக பெற்றது நமது நாடு பெற்ற மிகப்பெரிய ஆசீர்வாதம்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும் அவரது அக்கறையை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள இதுவே உகந்த நேரம். அந்த வகையில், எப்படி 2016-ல் அதிமுக அரசு அமைய ஆதரவு அளித்தார்களோ அதே முழு ஆதரவை தமிழக மக்கள் தொடர்ந்து அளிப்பார்கள் என்றும் இந்த பொன்னான வாய்ப்பை தவறவிட மாட்டார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

பாரத தேசத்தின் தவப்புதல்வர். பாமர மக்களின் சேவகர் பிரதமர் மோடி. அவரை போன்ற ஒப்பற்ற தலைவரை காண்பது அரிது. தமிழகத்தின் நலன் நாடும் தன்னிகரில்லா தலைவர் பிரதமர் மோடி. சிறந்த மாநிலத்திற்கான விருதை தமிழகம் மூன்று முறை பெற்றுள்ளது. சிறந்த ஆளுமைக்கான மத்திய அரசின் விருதை தமிழகம் பெற்றுள்ளது. காவிரி பிரச்னை விவகாரங்களில், தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது. மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியதற்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *