கோவையில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை..முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அடுத்தகட்டமாக கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் கலந்துகொண்ட மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்துக்கான செலவினை மத்திய, மாநில அரசுகள் சரிபாதி ஏற்க ஒப்புதல் அளிக்க வேண்டுமென முதல்வா்எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தாா்.

சென்னை, பிப்-15

தமிழகத்தில் ரூ.8,000 கோடி மதிப்பில் புதிய அரசுத் திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழா, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை:-

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை மாநகரத்தை உலகத் தரத்திற்கு மேம்படுத்த, பல்வேறு சிறப்பான உட்கட்டமைப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரத்தை குறைக்க தொலைநோக்கு பார்வையோடு, மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்தார். அதன் விளைவாகத்தான், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மிகுந்த முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 9.05 கிலோ மீட்டர் நீளத்தில் வண்ணாரப்பேட்டையிலிருந்து விம்கோ நகர் வரையிலான திட்டம் முடிவுற்று தற்போது பிரதமர் இதை துவக்கி வைப்பதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரிவடைந்து வரும் சென்னை பெருநகரின் போக்குவரத்து தேவையினை கருத்தில் கொண்டு, 118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டத்தை ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த முடிவு செய்து அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு 50 சதவீத நிதி உதவி அளிக்க வேண்டும்.

விமான நிலையத்துடன் முடிவடையும் மெட்ரோ ரயில் பாதையை வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள புறநகர் பேருந்து நிலையம் வரை நீட்டிப்பு செய்வதற்கான சாத்தியகூறு ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.கோயம்புத்தூர் மாநகரத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்பக் கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு மழைநீர் சேகரிப்பை முன்னெடுத்துச் செல்லவும், நீர் நீலைகளின் கொள்ளளவினை அதிகப்படுத்தி பாதுகாக்க, குடிமராமத்து திட்டத்தினை விவசாயிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தி வருகிறது.

கரிகால் பெருவளத்தானால் அமைக்கப்பட்ட கல்லணை இன்றளவும் நிலைத்து நின்று தமிழர்களின் பொறியியல் திறமையை உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. 4,200 கன அடி நீர் செல்லும் கல்லணை கால்வாயினை நவீன வசதிகளுடன் ரூ.2,640 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 1,714 மதகுகள், 26 கீழ்குமிழி பாலங்கள், 108 கிணறு நீர் இழுகுழாய், 76 சுரங்கங்கள், 28 நீர் ஒழுங்கிகள், 20 பாலங்கள் மற்றும் 403 ஏரிகள் புனரமைக்கப்படும்.மேலும், 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எஸ்சிஏடிஏ தொழில்நுட்ப மேலாண்மை முறை செயல்படுத்தப்படும். இதன் பயனாக தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 67,500 ஏக்கர் நிலங்கள் தொடர்ந்து பாசன வசதி பெறும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *