ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித்ஷா

ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

டெல்லி, பிப்-13

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. காஷ்மீரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள், யூனியன் பிரதேச அதிகாரிகளாக மாற்றப்பட்டனர். இதற்கான அவசர சட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார்.

இந்தநிலையில், தற்போதைய பாராளுமன்ற கூட்டத்தொடரில், இந்த அவசர சட்டத்துக்கு சட்ட வடிவம் கொடுப்பதற்காக, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் கடந்த 9ம்தேதி நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை அறிமுகம் செய்து பேசிய உள்துறை இணை மந்திரி கிஷண் ரெட்டி, ஜம்மு காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக அரசு செயலாற்றி வருவதாக கூறினார்.

‘சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்த பின்னர், ஜம்மு-காஷ்மீரில் சுமார் 170 மத்திய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது’ என்றும் அவர் பேசினார்.

அதன்பின்னர் மசோதா மது விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்படுகிறது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் சட்டமாக நடைமுறைக்கு வரும்

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதா மீது மக்களவையில் நடந்த விவாதத்திற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:-

பல எம்.பி.க்கள் இந்த மசோதாவைக் கொண்டுவருவதால் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்று கூறி வருகின்றனர். நான் தான் மசோதாவை தயாரித்தேன், நான் கொண்டு வந்தேன். அதன் நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளேன். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்று மசோதாவில் எங்கும் எழுதப்படவில்லை. நீங்கள் எதை வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்? நான் இந்த சபையில் கூறியுள்ளேன். இந்த மசோதாவிற்கும் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று மீண்டும் சொல்கிறேன். ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *