சொன்னதை செய்து காட்டிய எடப்பாடி பழனிசாமி..!பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளுக்கு வழங்கினார்..!!

பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளுக்கு வழங்கும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். தமிழக அரசின் உதவியை பெற ‘1100’ சேவை எண் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் கீழடி 7-ம் கட்ட அகழாய்வை சென்னையிலிருந்து காணொலி மூலமாக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

சென்னை, பிப்-13

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வழங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து பயிர்க்கடன் ரத்து செய்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. மேலும் பயிர்க்கடன் ரத்து செய்ததற்கான ரசீது 10 அல்லது 15 நாட்களில் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் ரத்துக்கான ரசீதை விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்கள், சாகுபடி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். முதல்வர் 5.2.2021 அன்று சட்டப்பேரவை விதி எண். 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்புக்கிணங்க பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 8.2.2021 அன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் அரசாணைகள் வெளியிடப்பட்டன. கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்று 31.1.2021 அன்று நிலுவையில் உள்ள 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகளின் 12 ஆயிரத்து 110.74 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், முதல்வர் இன்று 9 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்களை வழங்கி, தொடங்கி வைத்தார்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *