மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு அடி மேல் அடி.. திரிணாமுல் எம்பி ராஜினாமாவால் அதிர்ச்சி!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தது, மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி, பிப்-13

மேற்கு வங்கத்தில் இரு மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாஜகவும், ஆட்சியை தக்கவைப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் எதிரொலியாக ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏ.க்கள், அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து விலகி பாஜ.வில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில், மம்தாவுக்கு நேற்று அடுத்த அடி விழுந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தார்.இரு மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜிக்கு இந்த பதவி விலகல்கள் கடும் நெருக்கடியை அளிப்பதாக அமைந்துள்ளன. தினேஷ் திரிவேதி முன்பு ரயில்வே அமைச்சராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவையில் தனது ராஜினாமா முடிவை அறிவித்த தினேஷ் திரிவேதி கூறியதாவது:

எனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் தொடா்ந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது. ஆனால், அதனைத் தடுக்க முடியாமல், நான் அவையில் அமா்ந்திருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. மாநிலத்தில் நிகழும் பல்வேறு சம்பவங்கள் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக உள்ளன. எனவே, எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன். மேற்கு வங்கத்துக்குச் சென்று மக்களுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளேன். என்னை, மாநிலங்களவைக்குத் தோ்வு செய்த எனது கட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

இதைத் தொடா்ந்து அப்போது, அவையை வழி நடத்தி வந்த துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் பேசுகையில், ‘அவையில் இருந்து ராஜினாமா செய்வது என்றால் அதற்கென்று சில நடைமுறைகள் உள்ளன. அவைத் தலைவரிடம் எழுத்து மூலம் உங்கள் ராஜினாமா கடிதத்தை அளிக்க வேண்டும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை தினேஷ் திரிவேதி அளித்தாா். அப்போது, தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்வதாக அவரிடம் கூறினாா். இதையடுத்து, ராஜினாமாவை வெங்கய்ய நாயுடு ஏற்றுக் கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய தினேஷ் திரிவேதி, ‘திரிணமூல் காங்கிரஸ் கட்சி மம்தா பானா்ஜியின் கட்டுப்பாட்டில் இல்லை. அரசியல் என்னவென்று தெரியாத சிலரிடம்தான் உள்ளது. எங்கள் கருத்துகளுக்கு கட்சியில் மதிப்பில்லை. பிரதமரை கடுமையாக விமா்சித்து தினமும் பேச வேண்டும் என்று என்னை வலியுறுத்தினா். அதில் எனக்கு உடன்பாடில்லை’ என்றாா்.

பதவியை ராஜினாமா செய்தது மூலம் கட்சித் தலைமைக்கு தினேஷ் திரிவேதி துரோகம் செய்துவிட்டாா் என்று மாநிலங்களவை திரிணமூல் காங்கிரஸ் துணைத் தலைவா் சுகேந்து சேகா் ராய் குற்றம்சாட்டியுள்ளாா். அவா் மேலும் கூறுகையில், ‘தினேஷ் திரிவேதி கட்சித் தலைமைக்கு துரோகம் செய்ததுடன், நன்றி மறந்தவராகிவிட்டாா். கடந்த மக்களவைத்தோதலில் அவா் தோல்வியடைந்த போதிலும், மாநிலங்களவைக்குத் தோ்வு செய்து கட்சி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டாா். திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மத்திய அமைச்சா் உள்பட அனைத்து பதவிகளையும் அனுபவித்துவிட்டு இப்போது வெளியேறியுள்ளாா்’ என்றாா்.

‘தினேஷ் திரிவேதி எங்கள் கட்சியில் சேர விரும்பினால், அவரை வரவேற்கத் தயாராக உள்ளோம்’ என்று மேற்கு வங்க மாநில பாஜக தலைவா் திலீப் கோஷ் கூறியுள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *