பிரதமர் மோடி நாளை சென்னை வருகை.. எந்தெந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்?
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி, பிப்-13

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த ஜனவரி 19-ம் தேதி சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி – குண்டாறு இணைப்பு, கல்லணை புனரமைப்பு திட்டங் களுக்கு அடிக்கல் நாட்டவும், சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரை யிலான மெட்ரோ ரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரி வாயு திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கவும் தமிழகம் வருமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி நாளை (14-ம் தேதி) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.
விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர், அங்கிருந்து காரில் விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங் கத்துக்கு செல்கிறார். அங்கு 11.15 முதல் 12.30 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்திய ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட அர்ஜூன் ரக பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார்.
இதையடுத்து, 3,770 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள, வட சென்னை – விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் துவக்கி வைக்க உள்ளார்.
இதேபோல், 293.40 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை கடற்கரை – அத்திப்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள நான்காவது ரயில் வழித் தடத்தையும்; மின்மயமாக்கப்பட்ட, 228 கி.மீ., நீள ரயில் பாதையையும், அவர் துவக்கி வைக்க உள்ளார். இதன்பின், 2,640 கோடி ரூபாய் மதிப்பிலான கல்லணை கால்வாய் புதுப்பித்தல் திட்டம்; 1,000 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை ஐ.ஐ.டி.,யின் ஆராய்ச்சி வளாகம் அமைக்கும் திட்டம் உள்ளிட்டவற்றிற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையிலான 4-வது புதிய பாதை, விழுப்புரம் – கடலூர்- மயிலாடுதுறை – தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை- திருவாரூர் தடத்தில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளை திறந்து வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து 12.35 முதல் 12 .50 வரை முக்கிய நபர்கள் சந்திப்புக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து தேர்தல் கூட்டணி, சசிகலா வருகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக திட்டங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை மனுவை அளிப்பார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து, சாலை வழியாக மீண்டும் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து பகல் 1.35 மணிக்கு தனி விமானம் மூலம் கொச்சி செல்கிறார். இதையடுத்து, கேரளாவுக்கு செல்லும் பிரதமர், அங்கும் பல வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
பிரதமரை வரவேற்க பாஜக சார்பிலும், அதிமுக சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரு உள்விளையாட்டு அரங்கம், பிரதமர் பயணிக்கும் சாலைப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அவர்களது ஆலோசனையின்பேரில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
விழா நடக்கும் அரங்குக்கு வெளியில் 4 அடுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கப்படுகிறது. இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிரதமர் வரும் வழித்தடங்களில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.