எனக்கு நன்றி சொல்லும் எத்தனை பேரை கைது செய்வீர்கள்?.. ஸ்டாலின் கேள்வி

நியாயமான கோரிக்கைக்கும் போராடிய இளங்கீரனை போலீஸ் அராஜகமாக கைது செய்திருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எனக்கு நன்றி சொல்லும் எத்தனைப் பேரை கைது செய்வீர்கள்? என் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகார வெறியால் தோற்கப் போவது விவசாயிகள் அல்ல; முதல்வர் பழனிசாமி தான் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, பிப்-13

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

திருச்சி – சிதம்பரம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வீராநந்தபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளிடம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரனை அடித்து – இழுத்துச் சென்று அராஜகமாகக் கைது செய்துள்ள அ.தி.மு.க. ஆட்சிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“விவசாயி” என்று வேடம் போட்டு, நகர்வலம் வந்து கொண்டே – தனக்குக் கீழ் உள்ள காவல்துறையை விட்டு விவசாய சங்கத் தலைவரை அராஜகமாகக் கைது செய்திருக்கும் திரு. பழனிசாமி – மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துள்ளார்.

“மனிதாபிமானம் கிலோ என்ன விலை” என்று விவசாயிகளிடம் கேட்கும் திரு. பழனிசாமி, ‘என்னை வந்து பார்த்து விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு நன்றி தெரிவித்தார்’ என்பதை உள்நோக்கமாக வைத்து – இளங்கீரன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் போட்டு மனித நேயமற்ற முறையில் கைது செய்திருப்பது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை!

விவசாயிக்கு ஒரு கையில் “கடன் தள்ளுபடி அறிவிப்பு” இன்னொரு கையில் கடுமையாகத் தாக்கி “கைவிலங்கு” போடுவது – என்ற முதலமைச்சர் திரு. பழனிசாமியின் வேடம் இதோ கலைந்து விட்டது! அதிகார வெறி தலைக்கேறுவதால் படுதோல்வி அடையப் போவது முதலமைச்சர் திரு. பழனிசாமிதானே தவிர; போராடும் விவசாயிகள் அல்ல!

என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *