தமிழகத்தில் 2-ம் தவணையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு 2-வது ‘டோஸ்’ போடும் பணி தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.

சென்னை, பிப்-13

இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. தமிழகத்தில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது.

தமிழகத்தில் தடுப்பூசி போடுவதற்காக முதல் கட்டமாக 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 302 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 4 ஆயிரத்து 38 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 340 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 33 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்ட 28 நாட்கள் கழித்து 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட வேண்டும். அந்த வகையில் முதல் டோஸ் தடுப்பூசி போட ஆரம்பித்து இன்றுடன் 28 நாட்கள் ஆகிறது.
இதையடுத்து ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு 2-வது ‘டோஸ்’ போடும் பணி தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது. ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மையங்களுக்கு சென்று இன்று 2-வது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

சென்னையில் தற்போது தினமும் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதை 10 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் முதல்கட்ட தடுப்பூசியை போட்டுக்கொள்ள இன்னும் ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *