சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து; பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு..

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 19 -ஆக அதிகரித்துள்ளது. மேலும் 26 பேர் மதுரை மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து காரணமாக பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாத்தூர், பிப்-13

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலே 9 பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்த சாத்தூர், படந்தால், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 26 பேர் சாத்தூர், சிவகாசி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் 12 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 7 மாத கர்ப்பிணி பெண்ணும், கணவன் மனைவியும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து ஆலை உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைக்கு எடுத்த சக்திவேல் சிவகுமார், பொன்னுவேல் ஆகிய 3 குத்தகைதாரர்கள் உட்பட 6 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தலைமறைவானவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விதியை மீறி அதிக பணியாட்களைப் பயன்படுத்தியதே விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *