ஜெட் வேகத்தில் செயல்படும் எடப்பாடியார்! பயிர்க்கடன் ரத்து ரசீதை விவசாயிகளுக்கு இன்று வழங்குகிறார்..!!

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் ரத்துக்கான ரசீதை விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.

சென்னை, பிப்-13

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வழங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து பயிர்க்கடன் ரத்து செய்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. மேலும் பயிர்க்கடன் ரத்து செய்ததற்கான ரசீது 10 அல்லது 15 நாட்களில் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் ரத்துக்கான ரசீதை விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். மேலும் தமிழக அரசின் உதவியைப் பெறுவதற்கான 1100 சேவை எண் திட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டம் தொடர்பாக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:

பல்நோக்கு கூட்டுறவு சங்கம், பயிரிடுவோர் கூட்டுறவு சங்கம், கிராமப்புற கூட்டுறவு கடன் சங்கம், உழவர் பணி கூட்டுறவு சங்கம் உட்பட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களாக இருந்து நகர கூட்டுறவு கடன் சங்கங்களாக மாற்றம் செய்யப்பட்டவற்றில் வழங்கப்பட்ட பயிர்க் கடன்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்.

விவசாயிகளால் பெறப்பட்டு கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை நிலுவையில் உள்ள குறுகியகால பயிர்க் கடன், நகை ஈட்டின்பேரில் வழங்கப்பட்ட குறுகியகால பயிர்க்கடன், குறிப்பாக நகைக் கடன்(வேளாண்மை) என குறிப்பிடப்படும் கடனுக்கு இது பொருந்தும்.

சட்டப்பூர்வ விசாரணை, நிதி முறைகேடுகள், குற்ற நடவடிக்கைகள், தண்டத் தீர்வை நடவடிக்கைகளுக்கு உள்ளான கடன்கள், போலியான, புனையப்பட்ட, நம்பகத்தன்மை இல்லாத ஆவணங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட கடன்கள், பினாமி கடன்களுக்கு இது பொருந்தாது.

தகுதி பெறும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை நிலுவையில் உள்ள பயிர்க் கடன் அசல், வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் தொகுக்கப்பட்டு, அத்தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்.

அரசு திட்டங்களின் கீழ் பயிர்க் கடனுக்கு மானியம் பெற்றிருந்தால், பெறப்பட்ட மானியம் போக எஞ்சிய தொகை மட்டும் தள்ளுபடி செய்யப்படும்.

சிட்டா, பட்டா போன்ற ஆவணங்களுடன் குறிப்பிட்ட நிலத்தில் பயிர்செய்ய நகை ஈட்டின்பேரில் பெறப்பட்ட நகைக் கடன் (வேளாண்மை) மட்டுமே தள்ளுபடி செய்ய தகுதியுடையவை. வேளாண்மை சாராதவற்றுக்கு வழங்கப்பட்ட கடன்கள் இதில் தகுதியற்றவை.

ஜனவரி 31-ம் தேதி வரைதள்ளுபடி செய்யப்படும் தகுதியானபயிர்க் கடன்களுக்கு பிப்ரவரி 1 முதல் வட்டி வசூலிக்கக் கூடாது.

ஒவ்வொரு விவசாயிக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட சான்றிதழ், நிலுவையின்மை சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

தள்ளுபடி செய்ய தகுதியான கடன்களை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. தள்ளுபடி பெற்ற விவசாயிகள் புதிய கடன்கள் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

கூட்டுறவு சங்கங்கள், தள்ளுபடி செய்யப்பட்ட கடன் எண்,தொகை விவரங்களை விவசாயிகளுக்கு தனித்தனியாக கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

நிலுவையின்மை சான்றிதழ் வழங்கப்பட்டதும், விவசாயிகளால் பிணையாக வைக்கப்பட்ட அசல் நிலப் பதிவேடுகள், ஆவணங்கள், நகைகள் அனைத்தையும் விவசாயிகளிடம் உடனே திருப்பி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *