திமுக வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் எழுப்பிய சாவல்பூண்டி சுந்தரேசன் கட்சியிலிருந்து நீக்கம்!

திருவண்ணாமலை மாவட்ட (தெற்கு) திமுக துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை, பிப்-12

திருவண்ணாமலையை அடுத்துள்ள சாவல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன். 68 வயதான இவர், தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் பயணித்து வருகிறார். இவர் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டியிடம் உதவியாளராகத் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் தி.மு.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எ.வ.வேலுவின் தீவிர விசுவாசியாக இருந்து வந்தார்.

தொடர்ந்து 6 முறை சாவல்பூண்டி ஊராட்சித் தலைவராக தேர்வாகியிருக்கும் சுந்தரேசன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைச் செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகித்தார். சிறந்த பேச்சாளர், பெரியாரியக் கொள்கைப் பிடிப்பாளர் என அறிவாலயம் வரை அறியப்பட்ட சாவல்பூண்டி சுந்தரேசன் சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகி இருந்துள்ளது. சமீபத்தில், திருவண்ணாமலையைச் சேர்ந்த 28 வயதுடைய அபிதா என்ற இளம்பெண்ணைக் காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். சுந்தரேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி, மகள், மகன், பேத்தி உள்ள நிலையில், இளவயது பெண்ணை சாவல்பூண்டி சுந்தரேசன் காதல் திருமணம் செய்துகொண்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சாவல்பூண்டி சுந்தரேசன் பேசியதாக ஆடியோ உரையாடல் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அந்த பதிவில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் சுந்தரேசன். அந்த பதிவில், ‘மேடையில் எ.வ.வேலு, என் பெயரைச் சொன்னால் ஜால்ரா பசங்க எவனும் கைத்தட்ட மாட்டேங்கறானுங்க’ எ.வ.வேலுவின் பையன் கம்பன் கட்சியில் வந்து எதையும் புடுங்கலை. அப்பன் நிழல்ல இருக்கிற அவனுடைய பெயரைச் சொன்னால் கைதட்டுறானுங்க. அப்ப நாங்க உழைச்ச உழைப்பெல்லாம் வீண்தானே… ‘கையில் பணம் இருந்தால் கழுதைகூட அரசனடி. கைத்தட்ட ஆளிருந்தால் காக்கைக்கூட அழகனடி’னு சொல்ற மாதிரி இருக்கிறது. பள்ளிக்கூடம், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ-னு எட்டு கல்லூரிகள் நடத்துகிறார் எ.வ.வேலு. மருத்துவக் கல்லூரியும் கட்டிவருகிறார்.

தமிழ்நாடு முழுவதும் 6,000 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஸ்பின்னிங் மில், கிரானைட் கம்பெனி, கரூரில் 500 கோடி ரூபாய் ஃபைனான்ஸ், சினிமா படத்துக்கு ஃபைனான்ஸ் மற்றும் விநியோகம் எனப் பல்வேறுத் தொழில்களுடன் டி.வி தொடரும் எடுக்கிறார். இங்கு கட்சித் தொண்டன் கொடி எடுத்து ஓடுறான், குதிக்கிறான், ரத்தம் சிந்துறான், ஒரு பொறுப்புக்குக்கூட வராமல் அப்படியே செத்துப்போறான். வேலு மகன் கட்சிக்கு வரட்டும். வேணாம்னு சொல்லலை. அந்த நாற்காலியில இன்னிக்கே போய் உட்காரணுமா? ஏதாவது கல்லூரி நிர்வாகத்தைப் பார்க்கட்டும்.

அப்பன் மந்திரியா இருப்பாரு, மாவட்டச் செயலாளராக இருப்பாரு. அப்புறம் நீ வருவ. கருணாநிதி புள்ளைக்கும் சேர்த்துதான் சொல்றேன். பொழப்பைக் கெடுக்கிறானுங்க. ரத்தம் சிந்தி சிறைக்குச் சென்றவனுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்க மாட்டானுங்க. இது கட்சியா இல்லை அடிமைச் சாசனமா எழுதி கொடுத்துட்டோமா? வேலு மகனை கலியுக கம்பன், கலசப்பாக்கத்தைக் காப்பாற்ற வந்த கடவுள்னு ஜால்ரா பசங்க சொல்றானுங்க. என்ன கொடுமை பாரு இந்த நாட்டுல. கட்சி எவ்வளவு கேவலமாக போய்க்கிட்டிருக்கு…’ போன்ற கடுமையான சொற்களால் அந்த ஆடியோ பதிவு நீண்டு கொண்டே போகிறது.

இந்த ஆடியோவால் அதிர்ச்சி அடைந்த எ.வ.வேலு, அடுத்த சில நாட்களில் தன்னிலை விளக்கம் அளித்தார். அதில், தனக்கு 6,000 ஏக்கர் நிலம் இல்லை மற்றும் ரூ.500 கோடியில் பைனான்ஸ் தொழில் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட (தெற்கு) திமுக துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசனைக் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிக நீக்கம் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *