சாத்தூர் அருகே பட்டசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் பலி!

சாத்தூர் அருகே பட்டசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

சாத்தூர், பிப்-12

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. ஒரு அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இதனால் அடுத்தடுத்து உள்ள 6 அறைகளிலும் பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது.

இதில், 11 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தனர். இந்த விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை போலீஸார் மற்றும் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மற்றும் காயம்பட்ட நபர்கள் அனைவரும் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்களில் பட்டாசு தயாரிப்பு வேலையில் ஈடுபட்ட ஒரு கர்ப்பிணியும், கல்லூரி மாணவியும் அடங்குவர். விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன், எஸ்.பி. பெருமாள் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்கு பட்டாசுகளுக்கிடையே ஏற்பட்ட உராய்வே காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இதனிடையே, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *