மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள்.. அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு மு.க.ஸ்டாலின் கடும் பதிலடி

விழுப்புரம், பிப்-12

விழுப்புரம் மாவட்டம், காணை குப்பம் கிராமத்தில் இன்று ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூர், வானூர் தொகுதிக்குட்பட்ட பொதுமக்களிடம் குறைகளை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

“ஆட்சிக்கு வந்த 100 நாளில் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். கோரிக்கை மனுக்களை அளித்தவர்கள் அதற்குரிய ஒப்புகை சீட்டை பெற்றுக்கொள்ளவும். திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கை நிறைவேறாவிட்டால் ஒப்புகை சீட்டுடன் கோட்டைக்கு வந்து என்னை சந்திக்கலாம்.எந்த தொகுதிக்கு பயணம் மேற்கொண்டாலும் தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று இல்லை என்பதையே உணர முடிகின்றது. ஆட்சி என்ற ஒன்று இருந்திருந்தால், மக்களின் அன்றாட பிரச்சினைகளை தமிழக அரசு தீர்த்து வைத்திருக்கும்.மக்கள் வைக்கும் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றுவதில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் என்னிடம் கோரிக்கை வைப்பதை பார்த்து முதல்வர் மிரண்டு போயிருக்கிறார்.

குறைந்தபட்ச வேளாண் திட்டத்தைக் கொண்டுவந்து, அதற்காக விவசாயிகள் செல்போன் மூலம் அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்தார். அதனால் ஸ்டாலினுக்கு வேலையில்லை என்று பழனிசாமி சொல்லியிருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக பழனிசாமிக்கு இந்த எண்ணம் தோன்றவில்லை, இந்த ஸ்டாலின் கூறிய பிறகு தான் ஆட்சி முடியும் நேரத்தில் புத்தி வருகிறதா? யார் முதல்வர் பழனிசாமியா? இந்த ஸ்டாலினா? 2016-ம் ஆண்டு அதிமுக தேர்தல் வாக்குறுதியில் ‘அனைவருக்கும் செல்போன் கொடுப்போம்’ என கூறியது. ஆனால், முதல்வர் அனைவருக்கும் அல்வா தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆட்சியில் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் ஸ்டாலினால் குறைகளை கூற முடியாது என்கிறார் முதல்வர். மக்கள் கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலே போதும், இந்த ஆட்சியின் குறைகளை கண்டுபிடித்து விடலாம். காரணம், விழுப்புரத்தில் தடுப்பணை இடிந்து விழும் சப்தம், தாராபுரம் பாலம் விரிசல் விழும் சத்தம் கேட்கும். கரூரில் மினி கிளினிக் விழும் சப்தம் கேட்கும், நாமக்கல்லில் மருத்துவக்கல்லூரி இடிந்து விழுந்த சப்தம் என கேட்கும். இப்படி இடிந்து விழும் சப்தம் கேட்டலே அது பழனிசாமி அரசு தான் என புரிந்துகொள்ளமுடியும்.

தமிழகத்தில் நடைபெறுகிற எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஒரு ஊழல் ஆட்சி. விழுப்புரத்திலேயே அதற்கு ஒரு உதாரணம் இருக்கிறது. பொதுப்பணித்துறை சார்பில் எனதிரிமங்கலத்தில் ரூ.25 கோடி செலவில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. அந்த அணை உடைந்து போனது உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்த தொகுதியில் உள்ள அமைச்சர் என்ன சொன்னார்? அணை உடையவில்லை. சுவர் தான் உடைந்தது என்று சொன்னார். ஆனால் ராத்திரியில் அணை, காலையில் சுவர் என்று மாற்றி மாற்றி பேசினார்.

கடையில் அணையே திறக்கவில்லை என்று சொன்னார். இந்த 25 கோடியில் எவ்வளவு கோடிக்கு ஊழல் நடந்தது என தெரியவில்லை. அணை உடைந்ததும் திருடனுக்கு தேள் கொட்டியது போல மாட்டிக்கொண்டனர். அணையே திறக்கவில்லை என்று சொன்ன சி.வி.சண்மும் அணையை திறந்து வைக்கும் வீடியோ காட்சியை பாருங்கள். (தொடர்ந்து அந்த வீடியோ காட்சி பொதுமக்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.) பார்த்தீர்களா? அணையை திறந்து வைத்துவிட்டு அண்ட புலுகு ஆகாச புலுகாக பேசியுள்ளார். எனதிரிமங்கலத்தில் அணையே கட்டவில்லை என சி.வி.சண்முகம் சொல்வார். வடிவேல் கிணற்றை காணோம், கிணற்றை காணோம் என்று சொல்வது போல பேசுவார். அதிகாரிகள் மீது கண் துடைப்புக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒப்பந்ததாரர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ரயிலில் திருடியவனை விட்டுவிட்டு கரித்துண்டு பொறுக்குபவர்களை பிடிக்கிறார்களே என்ற கலைஞரின் பாலைவன ரோஜாக்கள் படத்தின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

செஞ்சியில் தரமற்ற கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார். இந்த ஒப்பந்ததாரர் ஏன் கைது செய்யவில்லை?. எல்லாவற்றிக்கும் பதில் சொல்வாரே சி.வி.சண்முகம். இந்த அதிமேதாவி இதற்கு பதில் சொல்வாரா? சட்டத்துறை பொறுப்பு வகிக்கும் அவர் மரியாதைக்குரிய வகையில் நடந்து கொள்கிறாரா? என்னை ஒருமையில் பேசுவதால் என் தகுதி குறையப்போவதில்லை. குளித்து முடித்துவிட்டு கோயிலுக்கு சென்று வரும் யானை எதிரே சாக்கடையில் புரண்டுவிட்டு வரும் பன்றியை பார்த்து ஒதிங்கி போகிறது. ஏனெனில் சாக்கடை அதன் மேல் பட்டுவிடக்கூடாது என்பதற்காக தான். சி.வி.சண்முகத்திடம் பத்திரிகையாளர்கள் மைக் நீட்டுவது பேசுவதற்காகத்தான். வாந்தி எடுக்க அல்ல.

என்னை பார்த்து வெட்கம் இல்லையா? என்று கேட்கிறார். உங்களை கொலை செய்ய ஆள் அனுப்பியவர் வீட்டில் தலை வாழை இலைபோட்டு சாப்பிட்டீர்களே. உங்களுக்கு வெட்கம் இல்லையா? அம்மா, சின்னம்மா என்று நொடிக்கு ஒரு முறை கூறினீர்களே. தற்போது என்ன ஆனது. அம்மா என்று அழைத்த ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்தது என உங்களால் விளக்கமாக சொல்ல முடியுமா? அந்த விவகாரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ்சை பார்த்து கருங்காலி என்று சொன்னீர்களே. ஜெயலலிதா ஆட்சியில் மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவியை ஏன் பறித்தார்கள். சி.வி.சண்முகம் அங்கு அதிகாரிகளை ஒருமையில் வசைபாடியது. பத்திரப்பதிவு துறையில் புகுந்து விளையாடினார் என்பதால் ஜெயலலிதா பதவியை பறித்து மூலையில் உட்கார வைத்தார். தற்போது உங்கள் அமைச்சர் பதவியை பயன்படுத்தி நீங்கள் உங்கள் சொந்த ஊருக்கு என்ன செய்தீர்கள். நந்தன் காய்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என்றீர்களே, ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டீர்களா?. விரிவுபடுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், விழுப்புரம் நகராட்சிக்கு சிறப்பு அந்தஸ்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுவட்டச்சாலை என எதையுமே செய்யவில்லை. இன்னும் 3 மாத்தில் கோட்டையை திமுக மீட்க போகிறது. தற்போது உள்ள ஆட்சியில் மக்களை பற்றியும் கவலையில்லை. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற சிந்தனையும் இல்லை. மக்களுக்கான மக்களாட்சி விரைவில் மலரும். கழக ஆட்சி மலரும். உங்கள் பிரச்னை தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *