நீட் தேர்வுக்கு பயிற்சி தர அரசு பள்ளிகளில் திறன் பெற்ற ஆசிரியர்கள் இல்லை.. அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு, பிப்-12

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை. அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் இல்லை. அதனால்தான் தனியார் மூலம் ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கல்வி டி.வி.யின் மூலம் பயின்ற மாணவர்களுக்கான கல்வி தரம் பற்றி ஆராய திறனாய்வு தேர்வுக்கான பணிகள் நடந்து வருகிறது. நீட் தேர்வு பயிற்சி பெற 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தற்போது 5 ஆயிரத்து 817 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். எந்த மாநிலத்திலும் நீட் தேர்வுக்காக இலவச பயிற்சி அளிக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு முன்னரே விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நூலகங்கள் அமைப்பது குறித்து இன்னும் அரசு பரிசீலிக்கவில்லை. இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் பொதுத்தேர்வு குறித்து அட்டவணை வெளியிடப்படும். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *