மநீம கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும், நிரந்தர தலைவராகவும் கமல்ஹாசனை தேர்வுசெய்து தீர்மானம் நிறைவேற்றம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தரத் தலைவராக கமல்ஹாசன் செயல்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை, பிப்-11

மக்கள் நீதி மய்யம் கட்சியைக் கடந்த 2017-ம் ஆண்டு கமல்ஹாசன் தொடங்கினார். அதன் தலைவராக கமல்ஹாசன் இருந்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்தது. அதில் மக்கள் நீதி மய்யம் சில தொகுதிகளில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளும், சில தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளும் பெற்று அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.தமிழகத்தில் சுமார் 4 சதவீத வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்த நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் அந்தக் கட்சியின் முதல் பொதுக்குழு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 800 பேர் வரை கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி, தேர்தலை எதிர்க்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கியமான தீர்மானமாக கமல்ஹாசன் டார்ச் லைட் சின்னத்தை மீண்டும் பெற்றதற்கு அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கமல்ஹாசனை நிரந்தர தலைவராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த கமல்ஹாசனுக்கு முழு அதிகாரமும், முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் மண்ணுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டுமென்பதற்காக தன் திறமை, தொழில், செல்வம், புகழ், அனுபவம் அனைத்தையும் பயன்படுத்தி இரவு பகல் பாராது உழைக்கும் நம் தலைவர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தரத் தலைவராக செயல்பட வேண்டும் என அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாகவும் வைக்கப்பட்ட கோரிக்கையை தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்படி கமல்ஹாசன் இன்று முதல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தரத் தலைவராகச் செயல்படுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

கட்சி தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்குரிய அதிகாரம் தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்படுகிறது. தேர்தல்களுக்கான கூட்டணி அமைப்பது, தனித்துக் களம் காண்பது, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்படுகிறது.

2021 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு உழைத்து மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களைப் பெருவெற்றி பெறச் செய்து நமது தலைவர் கமல்ஹாசனை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் நமது கனவினை நனவாக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *