1100 எண்ணில் குறைகளை உடனே நடவடிக்கை.. ஸ்டாலினின் மனுப்பெட்டியை கிண்டலடித்த முதல்வர் பழனிசாமி

திருப்பூர், பிப்-11

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் மாவட்டத்தில் இரு நாள்கள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை இன்று (பிப்.11) தொடங்கினார். தேர்தல் பரப்புரை பயணமாக திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த எடப்பாடி பழனிசாமியை, கோவை தேசிய நெடுஞ்சாலை மல்லேகவுண்டன் பாளையம் அருகில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர்.

இதில், திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட பாண்டியன் நகர், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட வளர்மதி பேருந்து நிறுத்தம், சிடிசி கார்னர் ஆகிய இடங்களில் அவர் பேசியதாவது:-

திமுக திட்டமிட்டே தமிழக அரசின் மீது வீண் பழி சுமத்தி வருகின்றனர். திமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் கொன்டு வரப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று பெட்சீட்டைப் போட்டு உட்கார்ந்து வருகிறார். திமுக ஆட்சியின் போது அவர் எங்காவது சென்று குறைகளைக் கேட்டுள்ளாரா? நாடாளுமன்றத் தேர்தலின்போது மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டாரே என்ன செய்தார்?

அவர் பொதுமக்களிடம் வாங்கிய மனுக்களை 100 நாள்களில் தீர்ப்பாராம். இது எவ்வவு பெரிய ஏமாற்று வேலை. உதாரணமாக குடிநீர் பிரச்னைக்காக மனுக்களைக் கொடுத்தால் அதற்காக திட்டம் தயாரிக்க வேண்டும். பின்னர் டென்டர் விட வேண்டும். அதனைப் பரிசீலனை செய்ய வேண்டும். இதற்கே ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும். அவர் 100 நாள்களில் தீர்ப்போம் என்பது ஏமாற்று வேலை. ஸ்டாலின் மனு வாங்கும் பெட்டியை உடைக்க வாய்ப்பில்லை ஏனென்றால் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை.

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் சென்னையில் 10 நாள்களில் தொடங்கப்படும். இதன் மூலமாக பொதுமக்கள் தங்களது செல்லிடப்பேசிகளில் இருந்து 1100 என்ற எண்ணுக்கு அழைத்து புகார்களைப் பதிவு செய்தால் சம்மந்தப்பட்ட துறை மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதை உடனடியாக நிறைவேற்றி வருகிறோம்.

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை ரத்து செய்து அரசாணையும் வெளியிட்டுள்ளோம். நாடாளுமன்றத்தில் 38 எம்பிக்களை கொண்டு ஏதாவது தமிழக நலனுக்கு குரல் கொடுத்துள்ளீர்களா? ஒரே எம்.பி.யை கொண்டு தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்துள்ளோம்.

திமுக ஆட்சியில் மின் வெட்டு இருந்தது. அதனை மாற்றி தற்போது மின் மிகை மாநிலமாக மாற்றியுள்ளோம். இதன் விளைவாக தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழகத்தைத் தேடி தொழிலதிபர்கள் வருகின்றனர். இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நொய்யல் நதி சீரமைப்பிற்காக 230 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க செயல்திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதனையும் நம் ஆட்சியில் துவங்கி வைக்கப்படும்.

திருப்பூரில் இ.எஸ்.ஐ.மருத்துவமனை கட்டும் இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பையடுத்து இ.எஸ்.ஐ.மருத்துவமனையும் கட்டப்படும். திருப்பூர் வடக்கு தொகுதில் 4 ஆண்டுகளில் ரூ.200 கோடிக்கும் மேல் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

இந்த பிரசாரத்தின்போது அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார், சு.குணசேகரன், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், கழக அமைப்புச் செயலாளர் சி.சிவசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *