பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பிய திமுகவுக்கு 7 பேர் விடுதலை பற்றி பேச தகுதி இல்லை.. S.P.வேலுமணி
கோவை, பிப்-11

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பேரூர் செட்டிபாளையம் பகுதியில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 73 ஜோடிகளுக்கு, வரும் 15-ம் தேதி இலவச திருமண விழா நடைபெற உள்ளது. விழாவுக்கான முன்னேற்பாடுகளை நேற்று ஆய்வுசெய்தபின், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
“மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 123 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் 73 சீர்வரிசை பொருட்களுடன் இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது.
நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் அதிமுக கூட்டத்தில் பேசியபோது அண்ணன், தம்பியாக இருந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென்று தான் பேசியது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது. தொகுதிக்கு 50 பேர் வேட்பாளர்களாக தகுதி இருந்தாலும் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அவ்வாறு பேசினேன்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கலைத்துவிட்டு, மு.க.ஸ்டாலினை குறுக்கு வழியில் முதலமைச்சராக்க, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று கூர்கில் வைத்தபோது தினகரனுக்கு திமுக பொது எதிரி என்பது தெரியவில்லையா?. திமுகப் பொது எதிரி என்பதால்தான் எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவித்ததார். இரட்டை இலை சின்னத்தை பல்வேறு பிரச்சினைகளை கடந்து மீட்டெடுத்துள்ளோம். முதலமைச்சரை பார்த்து முகஸ்டாலின் பயந்து மிரண்டு போயுள்ளார்.
கேவலமான அரசியல் விளம்பரத்தை தேடக்கூடிய இடத்தில் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். பல திட்டங்களை எடப்பாடியார் கொடுத்துள்ளார். எது வந்தாலும் நான் சொல்லி தான் செய்தார்கள் என கூறுகிறார் ஸ்டாலின். இதுபோல எந்த தலைவரும் கேவலமாக நடந்து கொண்டதில்லை. இதற்கு முன்பு லட்சக்கணக்கான மனுவை வாங்கி பெட்டியில் வைத்து பூட்டி வைத்துள்ளார். மு.க.ஸ்டாலினிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பது தெரியும். அதை வைத்து உதவிகள் செய்யலாம். எடப்பாடியாரை முதலமைச்சர் வேட்பாளராக எப்போது ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தாரோ அப்போதே முதலமைச்சர் வெற்றி பெற்று விட்டார்.
எல்லா தரப்பு மக்களும் முதல்வர் பழனிசாமியை ஏற்றுக்கொண்டுள்ளனர். எங்களுக்கு எப்போதுமே பொது எதிரி திமுகதான். அதனை வீழ்த்தும் சக்தி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு உள்ளது. முதல்வர் பழனிசாமியை பார்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. அவர் திமுகவை காப்பாற்றி, கூட்டணிக் கட்சிகளை காப்பாற்றினால் அதுவே அவருக்கு மிகப்பெரிய வெற்றி. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியது திமுக, தற்போது ஏழு பேர் விடுதலை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?” என்றார்.