மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டேன்; எதையும் சந்திக்கத் தயார் – முதல்வர் அதிரடி

அண்ணன்-தம்பி பிரச்சனை என்று கட்சிக்குள் பேசியதை திரித்து கூறுகிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குள் இருப்பது பற்றி அமைச்சர் வேலுமணி பேசியதை திரித்துக் கூறுகிறார்கள் என விளக்கமளித்தார்.

சேலம், பிப்-10

சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

“எஸ்.பி. வேலுமணி கட்சிக்குள் இருக்கும் பிரச்னையையே அண்ணன் தம்பி பிரச்னை என்று குறிப்பிட்டார். அந்த செய்தி தவறாக பரப்பப்படுகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள். சசிகலாவின் சொத்துகள் அரசுடமை ஆக்கப்படுவதற்கும், அரசுக்கும் தொடர்பில்லை. நீதிமன்றங்களின் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பாமகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. இடஒதுக்கீடு அளிப்பது பற்றி சூழலுக்கேற்ப முடிவெடுக்கப்படும். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா அரசு தொடரும். அதிமுக வேறு, அமமுக வேறு. அமமுக என்ன முயற்சித்தாலும் ஒன்றும் நடக்காது. அக்கட்சியிலிருந்து விலகி யாரேனும் அதிமுகவில் சேர விரும்பினால் கட்சி முடிவு செய்யும்.
அதிமுகவைப் பொறுத்தவரை திமுகதான் எதிரி கட்சி.

தினகரன்தான் 18 எம்எல்ஏ-க்களைப் பிரித்து, கட்சியை உடைத்து ஆட்சியைக் கலைக்க முயற்சித்தார். அதன்பிறகு அமமுக கட்சியைத் தொடங்கினார். அதனால்தான் தினகரனைப் பற்றியே பேசுகிறோம். அதிமுகவில் எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம்.

எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள், முதல்வர் மீதான ஊழல் வழக்குகளை தனி நீதிமன்றம் விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்துவிட்டது. ஸ்டாலின் அறியாமையில் பேசுகிறார். திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீதான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன.

நாம் செல்லும் இடங்களில் மக்கள் எழுச்சியுடன் கூடுகின்றனர்; மீண்டும் அதிமுக வெற்றி பெற்றி ஆட்சி அமைக்கும். அரசு ஊழியர்களுக்கு அதிகமான சலுகை அதிமுக ஆட்சியில் தான் கிடைத்துள்ளது. ஜனநாயக நாட்டில் யாரும் அடக்குமுறையில் ஈடுபடவில்லை என்றார். அச்சுறுத்தல், மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டேன்; எதையும் சந்திக்கத் தயார் .”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *