திருவாரூரில் சசிகலா, இளவரசியின் 7 சொத்துகள் அரசுடைமை
திருவாரூரில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.
திருவாரூர், பிப்-10

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், 2017 பிப்., 14ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு சொந்தமான, சில சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
தண்டனை முடிந்து, சசிகலா சென்னை திரும்பிய நிலையில், இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள், அரசுடைமையாக்கப்பட்டு வருகின்றன. சென்னையில், ஆறு சொத்துக்கள், காஞ்சிபுரத்தில், 17 சொத்துக்கள், செங்கல்பட்டில், ஆறு சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான இடங்களை அரசுடைமை ஆக்குவதாக, கலெக்டர் கோவிந்தராவ், அறிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்திலும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்திலும் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துகள், இன்று(பிப்.,10) காலை அரசுடைமையாக்கப்பட்டன. ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள 41.22 ஏக்கர் சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 7 சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு இறுதித் தீர்ப்பின்படி சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ராம்ராஜ் அக்ரோமில்ஸ் லிமிடெட் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கு சொந்தமாக வண்டாம்பாளை, கீழக்காவாதுகுடியில் உள்ள சொத்துகள் அரசுடைமை ஆக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் அனைத்தும் அரசுக்கு சொந்தமானது என அறிவிக்கப்படுகிறது. சொத்துகளில் இருந்து பெறப்படும் வாடகை, நிலுவை வாடகை உட்பட அனைத்தும் அரசுக்கு சொந்தம் என அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.