வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்புகின்றனர்.. மக்களவையில் பிரதமர் மோடி புகார்
டெல்லி, பிப்-10

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 70 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 11 சுற்றுப் பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும், விவசாயிகள் அமைப்புக்கும் இடையே நடந்து எந்தத் தீர்வும் எட்டவில்லை.
இந்தநிலையில் நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத்தில் பங்கேற்று பதிலுரையாற்றினார். அவர் பேசியதாவது:-
வேளாண் துறைக்கு ஊக்கமளிக்கவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. விவசாயிகளின் உணர்வுகளை மதிக்கிறோம். விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறோம். எங்களது நோக்கம் நேர்மையானது. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பலன் தரக்கூடியது. வேளாண் துறையில் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பலனை அளிக்க தொடங்கியுள்ளன. குறைந்தபட்ச ஆதார விலை பாதிக்கப்படவில்லை. விளைபொருட்கள் விற்பனை செய்யும் சந்தைகள் மூடப்படவில்லை. இந்த சட்டத்திற்கு தவறான வர்ணம் பூசி காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது. இந்த சட்டங்களை தடம்புரள செய்ய காங்கிரஸ் திட்டமிடுகிறது. எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்புகின்றன. விவசாயிகளுக்கு உண்மை தெரிந்துவிடுமோ என எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன. விவசாயிகளுக்கு உண்மை தெரிந்து விடுமோ என எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன. தேவையற்ற பயத்தை ஏற்படுத்தி நாட்டில் பிரச்னைகளை உருவாக்க பல சக்திகள் முயற்சித்து வருகின்றன. உரிமை பறிக்கப்படுகிறதா என கேட்டால் பதில் இல்லை. ஒருவரும் பதிலளிக்க தயாராக இல்லை.
வேளாண் சட்டங்களை அமல்படுத்திய பின்னர் எந்த மண்டிகளும் மூடப்படவில்லை, குறைந்தபட்ச ஆதார விலையானது (எம்எஸ்பி) நாட்டில் எங்கும் பாதிக்கப்படவில்லை. இது நாம் மறைக்கும் உண்மை, அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. சட்டங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் எம்எஸ்பி மீதான கொள்முதல் அதிகரித்தது. வேளாண் சட்டங்கள் தொடர்பாக தங்கள் கருத்துக்களை முன்வைத்து போராடி வரும் விவசாயிகளை இந்த அவை, நமது அரசு மற்றும் நாம் அனைவரும் மதிக்கிறோம். அவர்களுடன் மூத்த மந்திரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதற்கு அதுவே காரணம். விவசாயிகளுக்கு மிகுந்த மரியாதை உண்டு.நாங்கள் கேட்காதபோது ஏன் சட்டம் கொண்டு வந்தீர்கள் என்ற வாதம் வந்துவிட்டது. இதை ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பது உங்களைப் பொறுத்தது. இது கட்டாயமில்லை. வரதட்சணைக்கு எதிராக யாரும் சட்டம் கேட்கவில்லை. நாட்டின் முன்னேற்றத்திற்காக சட்டம் உருவாக்கப்பட்டது. முத்தலாக் மற்றும் குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டங்களும் உருவாக்கப்பட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் பேசியபோது அவர் தெரிவித்த சில கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.