பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்.. திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய 2-வது நோட்டீஸ் ரத்து: உயர்நீதிமன்றம்

சென்னை, பிப்-10

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக குற்றம் சாட்டி, அவற்றை தி.மு.க, உறுப்பினர்கள் அவைக்குள் கொண்டு சென்றனர். இது உரிமை மீறல் என்று கூறி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த நோட்டீஸை ரத்து செய்தது. மேலும் விதிமுறைகளை பின்பற்றி புதிய நோட்டீஸை அனுப்ப விரும்பினால், அனுப்பலாம் என்றும் உத்தரவிட்டது. இதனை அடுத்து புதிய நோட்டீஸை உரிமை மீறல் குழு மீண்டும் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

இந்நிலையில், பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற வழக்கில் திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய 2-வது நோட்டீஸ் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் அளித்த உரிமைக்குழு நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், உரிய காரணங்களின்றி சபாநாயகர் பரிந்துரைத்தார் என்ற காரணத்திற்காக மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

2017-ம் ஆண்டு அனுப்பப்பட்ட முதல் நோட்டீசை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்ததை தொடர்ந்து, 2வது நோட்டீசும் ரத்து செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *