சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுமா?

சென்னையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் இந்தத் தோல்வி மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னை, பிப்-10

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்கள் குவித்தது. இந்தியா 337 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது.

எனினும் பாலோ ஆன் கொடுக்காமல் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 241 ரன்கள் முன்னிலையுடன் ஆடிய இங்கிலாந்து அணி, வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிரடியாக அடித்து ஆடியது. ஆனால் அஸ்வின், ஷபாஸ் நதீம் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் நேர்த்தியாக செயல்பட்டு இங்கிலாந்து அணியின் ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டதுடன், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் விரைவில் வீழ்த்தினார்கள்.

இதனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 46.3 ஓவர்களில் 178 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி,192 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 72 ரன்கள், சுப்மன் கில் 50 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று அசத்திய இந்திய அணி, சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. இன்றைய வெற்றியின் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் போட்டிகளுக்கான புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு நியூஸிலாந்து அணி ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. நியூஸிலாந்து அணியுடன் விளையாடப் போகும் அணி இந்தியாவா அல்லது இங்கிலாந்து அணியா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய அணி இருந்தது.

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின், இந்திய அணி மோசமாக 4-வது இடத்துக்கு 68.3 சதவீதப் புள்ளிகளுடன் சரிந்துள்ளது. அடுத்துவரும் 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் அல்லது 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றால்தான் இறுதிச்சுற்றுக்குச் செல்ல முடியும். அதேசமயம், இங்கிலாந்து அணி 70.0 சதவீதப் புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 3-1 என்ற கணக்கிலோ அல்லது 3-0, அல்லது 4-0 என்ற கணக்கில் இந்திய அணியை வென்றால் இங்கிலாந்து அணி இறுதிச்சுற்றுக்குச் சென்றுவிடும்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தாலோ அல்லது, 1-0 என்ற கணக்கிலோ, 2-1 என்ற கணக்கிலோ அல்லது 2-0 என்ற கணக்கிலோ முடிந்தாலோ ஆஸ்திரேலிய அணி இறுதிச் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *