நம் எதிரி திமுகவை வீழ்த்த தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்படுவோம்.. அமைச்சர் S.P.வேலுமணி உறுதி

திருப்பூர், பிப்-10

திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் இருக்கும் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி , உடுமலை ராதாகிருஷ்ணன் , பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது :-

2021ல் மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வாவது உறுதி. குறுக்கு வழியில் முதல்வராக வர வேண்டும் என மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சி செய்தார். அதை அனைத்தையும் முறியடித்தவர் பழனிசாமி என்றார். மேலும், வழக்கமாக ஸ்டாலின் பொய் மட்டுமே பேசுவார். எதுவும் செய்ய மாட்டார். ஆனால் முதல்வர் செய்வார். அதனை உடனடியாக செய்ய சொன்னோம். அதன் வெளிப்பாடே விவசாய கடன் தள்ளுபடி என்றதுடன் அனைத்து தரப்பு மக்களும் தமிழக முதல்வரை ஏற்றுக்கொண்டு விட்டனர். திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என அனைவருக்கும் தெரியும்.

நாடாளுமன்ற தேர்தலில் பொய்களை பேசி மட்டுமே வெற்றி பெற்றார் என்று குற்றம்சாட்டினார். பூத் கமிட்டியில் நாம் 500 பேர் இருப்போம். திமுக 50 பேர் தான் இருப்பார்கள். ஆனால் திமுக சத்தமில்லாமல் அனைத்து வீடுகளுக்கும் சென்று பணியாற்றுவார்கள். நாம் தான் கூட்டமாக இருக்கிறோமே என விட்டுவிடுவோம். அவர்களுக்கு நிகராக நாமும் களப்பணி ஆற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுடன், நம் எதிரி திமுக. நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்சனை. நாம் ஒற்றுமையுடன் வேலை செய்ய வேண்டும். முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதற்கு நாம் பணியாற்ற வேண்டும்.

வேட்பாளர் யாராக இருந்தாலும் அதிமுக, இரட்டை இலை வெற்று பெற வேண்டும் என எண்ணி செயல்பட வேண்டும். சட்டமன்ற தேர்தல் முடிந்து 20 நாட்களுக்குள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடைபெறும். சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் தான் அனைத்திலும் நாம் வெற்றி பெற முடியும். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். அப்போது தான் நாம் வெற்றி பெற முடியும். முதல்வர் பதவிக்கு வருவதற்கு ஒரு அமைப்பு ராசி வேண்டும். அது எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. ஸ்டாலின் அப்படி இல்லை. நில அபகரிப்பு , மின்சாரம் துண்டிப்பு போன்றவைகள் எல்லாம் அதிமுக ஆட்சியில் கிடையாது.

சிறுபான்மையினர் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கருத்து உள்ளது. அது உண்மையல்ல. எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களிக்க அவர்களும் தயாராக உள்ளனர். நம் கொள்கை வேறு. கூட்டணி வேறு. சிறுபான்மையினர் பாதுகாப்பு என்பது நம் கொள்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *