தூத்துக்குடியில் இளவரசி, சுதாகரனின் 23 சொத்துகள் அரசுடமை.. தஞ்சையில் 26,740 சதுரடி காலியிடமும் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் சசிகலா உறவினர்களான இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 23 சொத்துகள் மற்றும் தஞ்சையில் 26 ஆயிரம் சதுரஅடி காலிமனை அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி, பிப்-10

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து சசிகலா, இளவரசி ஆகியோர் அண்மையில் விடுதலையாகினர். சுதாகரன் இதுவரை விடுதலையாகவில்லை. இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இளவரசி, சுதாகரனின் சொத்துகளை தமிழக அரசு அரசுடைமையாக்கியது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்த ரூ.315கோடி சொத்துகள் அரசுடமை ஆக்கப்பட்டதாக இரு மாவட்ட கலெக்டர்களும் அறிவித்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட கால்வாய், சேரகுளம், வல்லகுளம் பகுதிகளில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 800 ஏக்கர் நிலமும், சாத்தான்குளம் தாலுகாவில் மீரான்குளம் பகுதியில் சுமார் 250 ஏக்கர் இடமும் உள்ளது. இந்த இடங்களை தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினருடன் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறுகையில், ‘இந்த 1050 ஏக்கர் நிலமானது ‘ரிவர்வே அக்ரோ புரோடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப இந்த சொத்துகள் அரசுடமையாக்கப் பட்டுள்ளன ’ என்றார்.
இதேபோல், தஞ்சையில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான தரிசு நிலங்கள் அரசுடமையாக்கப்பட்டது. தஞ்சை வ.உ.சி. முதல் தெருவில் உள்ள மொத்தம் 26,740 சதுரடி பரப்பளவு கொண்ட 3 காலி மனைகள் நேற்று பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்டது. இந்த சொத்துக்கள் 1995ல் சென்னை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது ரூ.11 லட்சம் மதிப்பு. தற்போது பல கோடி மதிப்புள்ளது என தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
இந்த சொத்துகளை பறிமுதல் செய்து தமிழ்நாடு அரசின் சொத்து என்று பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, அந்த சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாய் (வாடகை, நிலுவை வாடகை உள்பட) அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாத்தியப்பட்டது என தூத்துக்குடி, தஞ்சை மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.