சசிகலா காலாவதியான மருந்து.. கலாய்த்த வைகைச்செல்வன்..!

சசிகலா ஒரு காலாவதியான மருந்து. சசிகலாவை பொதுச் செயலாளராக நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என சிங்கம்புணரியில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் பேசினார்.

சிங்கம்புணரி, பிப்-9

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் பேசுகையில்,

“உலகிலேயே மின் கம்பியில் துணியைக் காய வைக்கச் செய்த ஆட்சி திமுக ஆட்சிதான். திமுகவின் ஐந்தாண்டு சாதனையே மின்வெட்டால் ஏற்பட்ட மக்கள்தொகை பெருக்கம்தான். பெங்களூருவிலிருந்து ஒருவர் புறப்பட்டுவிட்டார்; அவர் பார்த்துக் கொள்வார் என்று சொல்கிறார் மு.க. ஸ்டாலின். அப்படியெனில் நீங்கள் எதற்கு? கட்சியைக் கலைத்து விடுங்கள்.

எங்கிருந்தோ வருபவர் அதிமுகவைக் கைப்பற்றி விடுவாரா? சசிகலா காலாவதியான மாத்திரை. காலாவதியான மாத்திரை நோயைக் குணப்படுத்த உதவாது. அதை எடுத்துகொண்டால் பக்க விளைவுகள்தான் ஏற்படும். அவரை பொதுச் செயலாளராக்க பொதுக்குழுவில் தீர்மானத்தை வாசித்தது நான்தான். நாங்கள் அப்போது அவரை ஏற்றுக் கொண்டாலும் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லையே. மக்கள் ஏற்றுக் கொள்ளாததால்தான் இபிஎஸ் ஓபிஎஸ் கட்சியை வழி நடத்தினார்கள். டிடிவி தினகரன் ஆர்.கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு கடன் பாக்கி வைத்துவிட்டு தலைமறைவானவர். ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் இருவரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியைச் சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார்கள்”

என்று வைகைச் செல்வன் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *