எங்களை கட்சியில் இருந்து நீக்க ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ்-க்கு அதிகாரம் இல்லை – சசிகலாவுக்கு கார் கொடுத்த அதிமுக நிர்வாகி சம்பங்கி பேட்டி
தங்களை கட்சியில் இருந்து நீக்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எந்த அதிகாரமும் இல்லை என சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சம்பங்கி தெரிவித்துள்ளார்.
சூளகிரி, பிப்-9

சசிகலாவுக்கு வரவேற்பு அளித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 6 பேர் ஒரே நேரத்தில் கட்சியில் இருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சம்பங்கி கூறியதாவது:-
எங்களை கட்சியில் இருந்து நீக்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அ.தி.மு.க. தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும்போது எங்களை எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும்? கட்சியில் இருந்து எங்களை நீக்கியதை சட்டப்படி சந்திப்போம். மாநில எல்லையில் அ.தி.மு.க. கொடியுடன் தான் சசிகலாவுக்கு வரவேற்பு அளித்தோம். நாங்கள் அ.ம.மு.க. கொடியை ஏந்தவில்லை. மேலும் அக்கட்சியிலும் சேரவில்லை. இதனால் எங்களை எப்படி கட்சியில் இருந்து நீக்கினார்கள். சசிகலா கார் பழுதானதால் எனது காரை வழங்கினேன். இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.