சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான 24 சொத்துகள் அரசுடைமை

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான 24 சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் அக்காள் மகனான வி.என்.சுதாகரன் மற்றும் சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசி ஆகியோருக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சொத்துகள் அரசுடைமையாக்கப்படுள்ளது.

செங்கல்பட்டு, பிப்-9

இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம்கோர்ட்டு மேல்முறையீட்டு வழக்கில் 14.2.2017 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்திற்கு உள்பட்ட சொத்துகளை அரசால் பறிமுதல் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் கிராமத்தில் உள்ள கீழ்கண்ட சொத்துகள் அரசுக்கு உரிமை மாற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சுதாகரன், இளவரசி பங்குதாரரர்களாக உள்ள சிக்னோரா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெயரில் உள்ள 7 சொத்துகளை பறிமுதல் செய்து தமிழக அரசின் சொத்து என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் மேற்கண்ட சொத்துகள் அனைத்தும் தமிழக அரசின் சொத்துகள் என அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறோம். இந்த சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாய் (வாடகை நிலுவை) உள்பட அனைத்தும் தமிழக அரசுக்கு பாத்தியப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், ஊத்துக்காடு கிராமத்தில் மெடோ ஆக்ரோ பார்ம்ஸ் பிரைவெட் லிமிடெட் பெயரில் உள்ள 144.75 ஏக்கர் பரப்பளவு கொண்ட 17 சொத்துகள் தமிழ்நாடு அரசின் சொத்துகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாய் (வாடகை நிலுவை) உள்பட அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாத்தியப்பட்டது என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தன்னுடைய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சென்னையில் சுதாகரன், இளவரசி இருவருக்கும் சொந்தமான 6 சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *