உலக நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு உயருகிறது-மோடி
குஜராத், அக்டோபர்-31
மறைந்த முன்னாள் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை 2014இல் இருந்து தேசிய ஒற்றுமை நாளாக மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இதையொட்டி, குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றுப் படுக்கையில் அமைக்கப்பட்டு இருக்கும் பட்டேலின் பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் அகமதாபாத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். துணை ராணுவப் படையினரின் சாகச நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
இதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது: ஒற்றுமைக்கான சிலை என்பது கோயில் போன்றது. வேற்றுமையில் ஒற்றுமைக்கான சிலைதான் இது. அமைதிக்கான உருவம்தான் இந்த சிலை. நாட்டில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம்.

வெளிநாட்டில் நாம் எதாவது பதக்கம் வென்று விட்டால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அதை கொண்டாடுகிறோம். நமது ஒற்றுமை காரணமாக உலக நாடுகளில் நமது செல்வாக்கு உயர்ந்து வருகிறது. நமது ஒற்றுமையை வெளிநாட்டினர் விசித்திரமாக பார்க்கின்றனர்.

சட்டப்பிரிவு 370 என்பது இந்தியாவுக்கு, காஷ்மீருக்கும் இடையிலான ஒரு சுவரைப் போன்று இருந்தது. ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதம் வளர்ந்து வந்தது. ஜம்மு காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைந்து இருக்க வேண்டும் என்று சர்தார் விரும்பினார். இதுதான் இந்தியாவை வளர்க்கும் என்று எச்சரித்தார். சட்டப்பிரிவு 370-ஆல் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக 40,000த்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். வளர்ச்சியை நோக்கி ஜம்மு காஷ்மீர், லடாக் சென்று கொண்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதன் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளது என்றார்.