முதல்வர் பிரச்சாரம் சென்ற இடத்தில் துப்பாக்கியுடன் இருந்த நபரை கைது செய்த போலீஸ்!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் முதல்வரை வரவேற்க காத்திருந்த கூட்டத்தில் துப்பாக்கியுடன் நின்ற நபரால் பரபரப்பு நிலவியது.

வேலூர், பிப்-9

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ‘வெற்றி நடைபோடுகிறது தமிழகம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் 5-ம் கட்டமாக இன்று காலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதனைத் தொடர்ந்து வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரைக்கு சென்ற பேரணாம்பட்டு பகுதியில் துப்பாக்கியுடன் இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பேரணாம்பட்டு பகுதியில் காரில் வந்த நபர் சாலையோரம் இருந்தவர்கள் மீது மோதிவிட்டு தப்பியோட முயற்சி செய்துள்ளார். பின்னர், காரில் தப்பிக்க முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்மந்தப்பட்ட நபரின் காரை சோதனை செய்த போலீசார் அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், சந்தேகத்திற்கு இடமாக ஆயுதங்கள், பல நம்பர் ப்ளேட்டுகளும் அந்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த நபரின் பெயர் அஜீஸ் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *