கோவை மேட்டுப்பாளையத்தில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடக்கம்

கோவை மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் 13-வது யானைகள் நல வாழ்வு முகாம் நேற்று (பிப்.8-ம் தேதி) தொடங்கியது. இதில் 26 யானைகள் கலந்து கொண்டன.

கோவை, பிப்-9

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில், யானைகள் நல வாழ்வு முகாம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. முதல் முதலாக, நீலகிரி மாவட்டம் முதுமலை அருகேயுள்ள தெப்பக்காட்டில் கடந்த 2003-ம் ஆண்டு யானைகள் நல வாழ்வு முகாம் நடத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து, கடந்த 2012-ம் ஆண்டு முதல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள, தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதியில் யானைகள் நல வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டு 13-வது யானைகள் நல வாழ்வு முகாம், மேற்கண்ட தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றுப் படுகையில் 5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் நேற்று மாலை (பிப்.8-ம் தேதி) தொடங்கியது. இந்த முகாம் வரும் மார்ச் 23-ம் தேதி (48 நாட்கள்) வரை நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கோயில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த 26 யானைகள் கலந்து கொண்டன. முகாமில் கலந்து கொள்வதற்காக பெரும்பாலான யானைகள் நேற்றே லாரியின் மூலம் முகாம் நடக்கும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டது.

யானைகள் நல வாழ்வு முகாம் தொடக்கத்தை முன்னிட்டு, அழைத்து வரப்பட்ட கோயில் யானைகள் அனைத்தும் குளிப்பாட்டி, நெற்றிப் பட்டம் கட்டி, பட்டுத்துணியால் அலங்கரித்து, வண்ணப் பொட்டுகள் வைத்து அலங்கரிக்கப்பட்டு, தொடக்க விழா இடத்துக்கு அழைத்து வரப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டது. முகாம் வளாகத்தில், பவானி ஆற்றங்கரையோரம் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. யானைகள் நல வாழ்வு முகாம் வளாகத்தில் மற்றொரு இடத்தில் ஹோமங்களும் நடத்தப்பட்டன. இந்த முகாமில் கலந்து கொண்ட யானைகளின் பாகன்களுக்கு கொரோனா பரிசோதனை முன்னரே மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பாகன்கள் மட்டுமே முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். நடப்பாண்டு முகாமில் ஸ்ரீ ரங்கம் கோயிலைச் சேர்ந்த யானை பிரேமி லெட்சுமி முதல் முறையாக கலந்து கொண்டது. ஸ்ரீ ரங்கம் கோயிலில் இருந்து நடப்பாண்டு ஆண்டாள், பிரேமிலெட்சுமி ஆகிய இரண்டு யானைகள் கலந்து கொண்டன.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இணைந்து, ரிப்பன் வெட்டி யானைகள் நல வாழ்வு முகாமை தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து முகாம் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். பின்னர், கரும்பு, அன்னாசிப்பழம், ஆப்பிள், சத்து மாத்திரைகள் ஆகியவை அடங்கிய தொகுப்பை அமைச்சர்கள் யானைகளுக்கு வழங்கினர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து, பழங்கள் அடங்கிய தீவனத் தொகுப்பை யானைகளுக்கு வழங்கினர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த தீவனத் தொகுப்பை யானைகளுக்கு வழங்கினர்.

பின்னர் மேற்கண்ட யானைகள் நல வாழ்வு முகாம் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வரவேற்பு அறை, அதிகாரிகள் அலுவலகம், கால்நடை பராமரித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முகாம் அலுவலக இடங்களை பார்வையிட்டனர். மேற்கண்ட 48 நாட்களும் யானைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், பராமரிப்பு முறைகள், வழங்கப்பட உள்ள மருந்து, மாத்திரை விவரங்கள் போன்றவற்றை கேட்டறிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *