அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன்.. சசிகலா அதிரடி பேட்டி..!

தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன், விரைவில் மக்களைச் சந்திப்பேன், மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என வாணியம்பாடியில் வி.கே.சசிகலா கூறினார்.

வாணியம்பாடி, பிப்-8

பெங்களூரிலிருந்து வாணியம்பாடி வழியாக சென்னை வரும் வழியில் நெக்குந்தி அருகே அமமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் சசிகலாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் வி.கே.சசிகலா கூறியதாவது:-

”தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன், அதிமுக அலுவலகத்துக்குச் செல்வீர்களா என நிறைய பேர் கேட்கின்றனர். பொறுத்திருந்து பாருங்கள், என்ன நடக்கப்போகிறது என்று.தொண்டர்களின் உற்சாக வரவேற்பைக் கண்டு நெகிழ்ச்சி அடைகிறேன். தொண்டர்களின் அன்புக்கும், மக்களின் அன்புக்கும் நான் எப்போதுமே அடிமை. எம்ஜிஆர் கூறியதைப்போல, ‘அன்புக்கு நான் அடிமை, தமிழ்ப் பண்புக்கும் நான் அடிமை, கொண்ட கொள்கைக்கும் நான் அடிமை’, தமிழ் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் என்றுமே நான் அடிமை’.

அடக்குமுறைக்கு என்றுமே நான் அடிபணிய மாட்டேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அவசர, அவசரமாகத் திறக்கப்பட்டது, அதன்பிறகு அதே அவசர கதியில் மூடப்பட்டது ஏன்? என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். என் வாகனத்தில் அதிமுக கொடியைப் பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்திருப்பது அவர்களது பயத்தைக் காட்டுக்கிறது. அதிமுகவைக் கைப்பற்றுவீர்களா? எனச் சிலர் கேட்கின்றனர். மிக விரைவில் உங்களையும் (செய்தியாளர்கள்) மக்களையும் நேரில் சந்திப்பேன். அப்போது சொல்கிறேன், அதுவரை பொறுத்திருங்கள்.

அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும். எத்தனையோ முறை அதிமுக சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு எழுந்து வந்துள்ளது கட்சி. ஜெயலலிதா வழி வந்த பிள்ளைகளாகிய நாம் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பமாகும்.

மீண்டும் ஆட்சியில் அமரக்கூடாது என ஒரு கூட்டம் தனியாகச் செயல்படுகிறது. அதை முறியடிக்க வேண்டும். மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும். வளர்க அதிமுக, எம்ஜிஆர் நாமம் வாழ்க, ஜெயலலிதா நாமம் வாழ்க”.

இவ்வாறு சசிகலா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *