மக்களுக்கு துரோகத்தை மட்டுமே செய்தவர் மு.க.ஸ்டாலின்.. அமைச்சர் S.P.வேலுமணி
2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உதகையில் நடந்த விழாவில் திட்டவட்டமாக தெரிவித்தார்.
உதகை, பிப்-8

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (பிப். 08) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா வரவேற்றார். விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் ரூ.15.58 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள 4 கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், பல்வேறு துறைகளின் கீழ் ரூ.6.53 கோடியில் முடிக்கப்பட்ட 15 கட்டிடங்கள் மற்றும் சாலைகளை திறந்து வைத்தார்.
பின்னர், பல்வேறு துறைகள் மூலம் 3,852 பயனாளிகளுக்கு ரூ.11.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
“அதிமுக அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் பல மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஏழை மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவை நிறைவேற்றும் வகையில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, தமிழகத்தில் 400 மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இரு மாவணர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் தற்போது ரூ.12 ஆயிரத்து 110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.9,838 கோடி கடனுதவி வழங்கப்பட்ட நிலையில், அதிமுக ஆட்சியில் ரூ.80 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.ஏழை மக்களின் மருத்துவ தேவையை தீர்க்க மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு நாளைக்கு 4,900 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பல கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, நாள் ஒன்றுக்கு 7,550 எம்எல்டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால், சென்னைக்கு குடிநீர் பிரச்சினையே வராது.
நீலகிரி மாவட்ட மக்கள் உயர் மருத்துவ சிகிச்சை பெற ரூ.447.38 கோடியில் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டு, தற்போது 40 சதவீத கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன.இதன் மூலம் இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது.
இன்று முதல் கல்லட்டி மலைப்பாதை திறக்கப்பட்டுள்ளது. வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும். உதகை நகராட்சி மார்க்கெட்டில் தீ விபத்தால் சேதமடைந்த கடைகள் ரூ.50 லட்சத்தில் புனரமைத்து திறக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளின் பாதுகாப்பு கருதி ஷட்டர் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், படுகரின மக்களின் கோரிக்கையான பழங்குடியினர் அந்தஸ்து குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனால், 2021 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்”.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.