சசிகலா வந்துவிட்டார்; இனி அதிமுகவில் நடக்க வேண்டியது நடக்கும்.. ஸ்டாலின்

பெங்களூருவில் இருந்து சசிகலா வந்துவிட்டார், இனி அதிமுகவில் நடக்க வேண்டியது நடக்கும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுக்கோட்டை, பிப்-8

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கந்தர்வகோட்டை (தெ) ஒன்றிய திமுக செயலாளர் திரு. எம்.பரமசிவம் அவர்கள் இல்லத் திருமணவிழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
உரை விவரம்:-

ஒன்றியச் செயலாளர் பரமசிவம் அவர்களின் இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று, மணவிழாவை நடத்தி வைத்து, அதே நேரத்தில் மணமக்களுக்கு வாழ்த்து சொல்லும் ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.
நம் சண்முகநாதன் அவர்கள் இங்கு வாழ்த்துரை வழங்கிய போது, எனக்கு பல வேலைகள் இருக்கிறது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து வாக்கு கேட்க வேண்டிய நேரத்தில் இந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக சுட்டிக் காட்டினார்.இங்கும் நான் வாக்கு கேட்க தான் வந்திருக்கிறேன். இப்போது அதுதான் என்னுடைய வேலை. என் வேலை மட்டுமில்லாமல் இனிமேல் உங்கள் வேலையும் அதுதான். எனவே அந்த உணர்வோடு நான் இந்த மேடைக்கு – நிகழ்ச்சிக்கு – விழாவிற்கு – மணமக்களை வாழ்த்துவதற்காக வந்திருக்கிறேன்.

சீர்திருத்த முறையில், சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கும் திருமணமாக இந்தத் திருமணம் நடந்தேறியிருக்கிறது. இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் 1967க்கு முன்பு நடைபெற்றால், அந்த திருமணங்கள் சட்டப்படி அங்கீகாரம் பெற முடியாத நிலை இருந்தது.

ஆனால் 1967இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று, பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக முதன்முறையாக சட்டமன்றத்தில் முதலமைச்சராக நுழைந்து, சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்றைக்கு பெற்றுத் தந்தார்கள்.

எனவே இப்போது நடைபெற்றிருக்கும் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற முறையோடு, உரிமையோடு நடந்தேறியிருக்கிறது. இது சீர்திருத்தத் திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடந்தேறியிருக்கும் திருமணம்.

சுயமரியாதை உணர்வோடு நடந்திருக்கும் திருமணம் மட்டுமல்ல, இது ஒரு தமிழ்த் திருமணம். நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு ‘செம்மொழி’ என்ற அங்கீகாரம் பெற்றுத் தந்த தலைவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை நாடு மறந்திவிட முடியாது.

அப்படிப்பட்ட அந்த அழகு தமிழ் மொழியில் நடைபெறுகிறது இந்த மண விழா. இப்போதெல்லாம் நேரடியாகச் சீர்திருத்த திருமணங்கள் நடத்துவதைவிட, காணொலி மூலமாக திருமணங்கள் நடத்தி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து விட்டது.

இப்போதெல்லாம் காணொலி மூலமாக ஒரு நாளைக்கு 2 திருமணங்கள் மற்றும் 3 திருமணங்கள் நடத்தி வைக்கிறேன். இப்போதெல்லாம் ஐயர்களுக்கு, திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதர்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ, இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் நடத்தி வைக்கும் இந்த ஸ்டாலின் போன்றவர்களுக்குத்தான் தேவைகள் அதிகமாக இருக்கின்றன.

அந்த அளவிற்கு இன்றைக்கு மக்களிடத்தில் ஒரு விழிப்புணர்வு வந்திருக்கிறது என்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய பரமசிவன் அவர்களைப் பற்றி இங்கு உரையாற்றியவர்கள் எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். அவரே நன்றியுரை ஆற்றுகிறபோது உணர்ச்சியோடு பல்வேறு செய்திகளை குறிப்பிட்டுச்சொன்னார்.

1978இல் தான் அவருடைய திருமணம் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இன்றைக்கு அவருடைய மகன் திருமணத்தை கலைஞருடைய மகனாக இந்த ஸ்டாலின் நடத்திவைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். உங்கள் மகனுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் திருமணம் நடத்தி வைக்க நான் தான் வருவேன். கவலைப்படாதீர்கள்.

என்னை அழைக்கத்தான் போகிறீர்கள். என்னை அழைக்காமல் விட மாட்டீர்கள். நான் வருவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் பிடிவாதமாக என்னை கட்டாயப்படுத்தி அழைத்து தான் வரப்போகிறீர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. அந்த உரிமை உங்களுக்கு இருக்கிறது.

இங்கு நேரு அவர்கள் பேசுகிறபோது சொன்னார், எனக்கு மிகவும் வேண்டியவர் என்று, உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் வேண்டியவர் தான் நம்முடைய பரமசிவம் அவர்கள். எல்லோருடைய மனதிலும் ஒரு சிறப்பான இடத்தை பெற்றவராக அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.அதுமட்டுமின்றி, இந்தப் பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றுகிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல. மக்களுடைய மனதை கவர வேண்டும், மக்கள் மனதில் பதிய வேண்டும், மக்களுக்கு பணி செய்ய வேண்டும்.

அவரே பெருமையாக, விருது வாங்கியதாக சொன்னார். நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது – இப்போது உள்ளாட்சித்துறை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அது ஊழல் ஆட்சித்துறையாக இருக்கிறது.

நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக – கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சித் துறை என்பது ஒரு நல்லாட்சி துறை அமைச்சர் என்று என்னை சொல்லுவார்கள். அப்படிப்பட்ட துறையாக இருக்கும் வகையில் நான் அந்தப் பணியை மேற்கொண்டேன். ஆனால் இன்றைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் ஒருவர் இருக்கிறார். முதலமைச்சரை விட அதிகம் யார் கமிஷன் வாங்குகிறார் என்றால் அவர்தான் – வேலுமணி என்கிற ஊழல் ஆட்சித்துறை அமைச்சர்.

எல்லாவற்றிலும் கொள்ளையடித்தார்கள்.
எல்லாவற்றிலும் கமிஷன் – கலெக்சன் – கரெப்சன் தான். ஆனால், கொரோனா காலத்தையும் பயன்படுத்தி கொள்ளையடித்த ஆட்சிதான் இப்போது பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி. கொரோனா காலம் என்பது யாரும் வெளியில் வரமுடியாது. பக்கத்து வீட்டிற்குச் சென்று பேச முடியாது. உறவினர்களை சந்திக்க முடியாது. பள்ளிக்கூடம் இல்லை. மாஸ்க் போட வேண்டும். கையில் கிளவுஸ் போட்டுக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளியில் தான் பேச வேண்டும். அப்படி ஒரு கட்டம் இருந்தது.

அவ்வாறு வாழ்வாதாரத்தை மக்கள் இழந்த நிலையில் தவித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நிலையில் ஆட்சியிலிருப்பவர்கள் செய்ய தவறிய அத்தனையையும் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னின்று செய்தது.

‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தை அறிவித்து, அதன் மூலமாக கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு வீடு தேடிச் சென்று மளிகைப் பொருட்களை, காய்கறிகளை, பல இடங்களில் சமைத்து உணவு வழங்கினோம்.

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரைகளை அவர்கள் வீட்டிற்கு கொண்டு சென்று கொடுத்தோம். எப்படிப்பட்ட நிலையில் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வெளியில் வருவதற்கு எல்லோரும் பயந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த பணியை செய்தோம் என்றால் நான் பெருமையோடு சொல்கிறேன், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே எந்த கட்சியும் செய்யாத ஒரு காரியத்தை தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் செய்தது.

அதுவும் எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில் செய்தோம். 10 வருடங்களாக நாம் எதிர் கட்சி. இன்னும் 3 மாதங்களில் நாம்தான் ஆளுங்கட்சி. அதில் எந்த மாற்றமும் இல்லை. என்ன இவ்வளவு ஆணவமாக, தெம்பாக சொல்லுகிறேன் என்று நினைக்காதீர்கள்.
மக்களை தினம் தினம் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அந்த தெம்போடு தான் நான் சொல்கிறேன். மக்கள் அந்த அளவிற்கு துன்பத்திற்கும், பல கஷ்டங்களுக்கும், பல துயரங்களுக்கும் ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா காலத்திலும் கொள்ளை அடிக்கும் ஆட்சிதான் இங்கு இருந்து கொண்டிருக்கும் ஆட்சி. அப்படிப்பட்ட இந்த ஆட்சியை தூக்கி எறிவதற்கு இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அதை தெரிந்து கொண்டு தான் இன்றைக்கு இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் ஏதேதோ அறிவிப்புகளை எல்லாம் வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

அவருக்கு ஒரு அச்சம் வந்துவிட்டது. பெங்களூரிலிருந்து பயங்கரமாக அதிர்ச்சி வந்துவிட்டது. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. பெங்களூர் எல்லையைத் தாண்டி ஓசூர் பகுதிக்கு வந்து விட்டார்களாம். இந்தச் செய்திகளை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

என்னென்ன நடக்கப்போகிறதோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ‘யாமறியேன் பராபரமே’. அப்படி ஒரு சூழல் அங்கு. நாம் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நான் கேட்கிற கேள்வி, திடீர் திடீரென்று இன்றைக்கு அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்களே?

10 வருடங்களாக இல்லாத அறிவிப்புகள், 2 நாளைக்கு முன்பு சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருக்கும் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார். நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் 2006 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்த நேரத்தில், தலைவர் கலைஞர் அவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப் போகிறோம் என்ற உறுதிமொழியை, வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி இருந்தார்கள்.

அதில் மிக மிக முக்கியமான ஒன்று. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயப் பெருங்குடி மக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் 7000 கோடி ரூபாய் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.ஆட்சிக்கு வந்தார். ஆட்சிப்பொறுப்பை ஏற்று, சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள். அதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் கலைஞர் அவர்கள், கோட்டைக்கு கூட செல்லாமல், கோட்டையில் இருக்கும் கோப்புகளை விழா மேடைக்கு கொண்டு வர வைத்து 7,000 கோடி ரூபாய் கடன் ரத்து என்று கையெழுத்து போட்டார்.

அப்போது எங்களைப் போன்ற சிலர், “7000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்கிறீர்களே, இதில் யார் அதிகம் பலன் பெறுவார்கள் என்று பார்த்தால் ஏற்கனவே இருந்த ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. வினர்தான் அதிகமாக வாங்கியிருக்கிறார்கள். தி.மு.க.காரர்கள் குறைவாகத்தான் வாங்கியிருக்கிறார்கள். இது நியாயமா? என்று தலைவரிடத்தில் கேட்டபோது, தலைவர் அப்போது என்ன சொன்னார் தெரியுமா, “நான் அவர்களை அ.தி.மு.க. என்று தி.மு.க. என்று பார்க்கவில்லை. அவர்கள் அத்தனை பேரையும் இந்த நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்களாக நான் பார்க்கிறேன்” என்று சொன்னார். அதை மறந்திருக்க மாட்டீர்கள்.
அதைத்தொடர்ந்து நான் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி அன்று நான் திருவள்ளூர் – பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு கிராம சபை கூட்டத்தை நடத்துவதற்கு சென்றிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் நான் பேசும் போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் எப்படி கலைஞர் 7000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தாரோ, அதேபோல தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று நான் அப்போது அறிவித்தேன்.

அதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் நான் அறிவித்தேன். நம்முடைய முன்னோடிகளும் அதை தொடர்ந்து வலியுறுத்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள். இது மக்களிடத்தில் பரவலாக சென்றுவிட்டது. இது தி.மு.க.விற்கு நன்மையாக சென்று சேர்ந்துவிடும். எனவே இதை திசை திருப்ப வேண்டும் என்று திட்டமிட்டு 2 நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

நான் கேட்கிறேன், நான் வெளியிட்டது இருக்கட்டும். நான் அறிவித்தது இருக்கட்டும். நீங்கள் ஆட்சி பொறுப்பில் இருக்கின்ற இந்த 10 வருடங்களில் விவசாயப் பெருங்குடி மக்கள் எத்தனை முறை உங்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். பலபேர் சாலைகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் எத்தனை போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு டெல்லியில் இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து, கடும் குளிரைப் பற்றி கவலைப்படாமல் குடும்பம் குடும்பமாக அங்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி கேள்வி கேட்க நாதி இல்லை. அவர்கள் நாடகம் நடத்துகிறார்கள் என்று இங்கிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் சொன்னார். அவர்கள் புரோக்கர்களாக மாறிவிட்டார்கள் என்று கமிஷன் வாங்கும் ப்ரோக்கர் பழனிசாமி சொன்னார்.

இந்த 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு, பா.ஜ.க. ஆட்சி எந்த வாக்கெடுப்பும் நடத்தாமல், விவாதம் செய்யாமல், சர்வாதிகாரமாக நாடாளுமன்றத்தில் அதை நிறைவேற்றி விவசாய பெருங்குடி மக்களுக்கு பல கொடுமைகளை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகை செய்யும் வகையில் இன்றைக்கு பா.ஜ.க. ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய பெருங்குடி மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் வங்கியில் வாங்கி இருக்கும் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். சென்னை உயர் நீதிமன்றம் 3 மாதத்திற்குள் அதை ரத்து செய்யுங்கள் என்று தீர்ப்பு கொடுத்தது. தீர்ப்பு கொடுத்ததும் உடனடியாக உச்ச நீதிமன்றத்துக்கு சென்று தடை வாங்கி வைத்திருக்கிறார்கள். தடை வாங்கி வைத்துக்கொண்டு தள்ளுபடி செய்ய முடியாது என்று 10 வருடங்களாக சொல்லிவிட்டு, நாங்கள் சட்டமன்றத்தில் பேசிய போது, எங்கே நிதி இருக்கிறது என்று எங்களைப் பார்த்து கேள்வி கேட்டவர்கள், இப்போது தேர்தல் 3 மாதங்களில் வருகின்ற காரணத்தால் இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கு என்ன காரணம்?

இதைக் கேட்டால், நாங்கள் அறிவிக்கிறோம் என்று தெரிந்து ஸ்டாலின் சொல்லி விடுகிறார் என்று சொல்லுகிறார். நீங்கள் காலில் விழுந்ததை நான் முன்கூட்டியே சொன்னேனா?

காலில் விழுவது என்றால் சாதாரணமாக அல்ல, ஊர்ந்து சென்று காலில் விழுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
இதைச் சொன்னால் அவருக்கு கோபம் வந்து விடும். இப்படி சென்று முதலமைச்சர் பதவி பெற்றவர் என்று சொன்னால், தவழ்ந்து சென்று முதல்வர் ஆனார் என்று சொன்னால், அவர் “உங்கள் அப்பா கலைஞரும் தான், அண்ணா மறைவிற்கு பிறகு முதலமைச்சர் ஆனார். அவரும் மக்களை சந்தித்து முதல்வர் ஆகவில்லை” என்று சொல்லுகிறார்.

நன்றாக சிந்தித்துப் பாருங்கள். எம்.ஜி.ஆர்.தான் கலைஞரை முதல் அமைச்சர் ஆக்கினார் என்று ஒரு தவறான செய்தியை சொல்லிக்கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர். மட்டுமல்ல, அண்ணா மறைவிற்குப் பிறகு, எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து ஏகமனதாக தேர்ந்தெடுத்து முதலமைச்சர் பொறுப்பை ஏற்றவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
அப்போது எம்.ஜி.ஆர். அவர்கள் நம் கட்சியின் பொருளாளராக இருந்தார். உங்கள் நிலைமை அப்படியா? கூவத்தூரில் உட்கார்ந்துகொண்டு 18 பேர் உங்களுக்கு ஓட்டு போட்டார்களா? 18 பேர் நீங்கள் முதலமைச்சராக பொறுப்பேற்க கூடாது என்று கவர்னரிடத்தில் மனு கொடுத்தவர்கள். நீங்கள் எப்படி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள் என்று திருப்பி கேட்க முடியும்.

எது எப்படி இருந்தாலும் சரி, ஆனால் இன்றைக்கு ஒரு அடிமை ஆட்சி, மத்திய அரசுக்கு அடிபணிந்து நடக்கும் ஒரு ஆட்சி இந்த தமிழ்நாட்டில் பழனிசாமி தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த பழனிசாமி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள் நெருங்கிவிட்டது.

அப்படி நெருங்கும் இந்த சூழ்நிலையை நீங்கள் எல்லாம் நல்ல வகையில் பயன்படுத்தி வரவிருக்கும் தேர்தலில் ஒரு சிறப்பான வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கும் தேடித் தரவேண்டும் என்று உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொண்டு நம்முடைய பரமசிவம் அவர்கள் இந்த இயக்கத்திற்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டு, ஒன்றியச் செயலாளராக – ஊராட்சி மன்றத் தலைவராக அவர் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அவர் மக்களிடத்திலும் – கழகத் தோழர்களிடத்திலும் ஒரு நல்ல செல்வாக்கு பெற்று இருக்கிறார். அப்படிப்பட்டவர் இல்லத்தில் இந்த குடும்ப விளக்குகளை உங்கள் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் மனதார, நெஞ்சார, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய் வாழுங்கள்… வாழுங்கள்… வாழுங்கள்… என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *