எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு… அதிமுகவுக்கு பிரேமலதா எச்சரிக்கை

சென்னை, பிப்-8

இது தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

தேமுதிக ஆரம்பிக்கப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தனித்து போட்டியிடுவது ஒன்றும் தேமுதிகவிற்கு புதிதல்ல. நாளையே விஜயகாந்த் சொல்லிவிட்டால் 234 தொகுதியிலும் போட்டியிட எங்களிடம் வேட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
தேமுதிக இப்போதும் தனித்து போட்டியிட்டால் 10 முதல் 15 சதவீத வாக்குகளை பெறும். ஆனாலும், கூட்டணி தர்மத்துக்காக பொறுமையாக காத்திருக்கிறோம். இந்த பொறுமைக்கும் எல்லை உண்டு. இத்தேர்தலில் தேமுதிக இல்லாமல் யாரும்ஆட்சி அமைக்க முடியாது.

தமிழில் ‘மன்னிப்பு’ என்ற வார்த்தை கேப்டனுக்கு பிடிக்காத வார்த்தை. அதே போல், எனக்கு தமிழில் ‘கூட்டணி’ என்ற வார்த்தை பிடிக்காது. நம்மை கூட்டணிக்கு பயன்படுத்திக்கொண்டு, நமது வாக்குகளை பெற்றுக் ஆட்சியை பிடித்துக் கொள்கிறார்கள். பின்னர், உள்ளாட்சிகளில் நமது கட்சியையும் தொண்டர்களையும் புறக்கணிப்பார்கள். இன்றுவரை இதுதான் நடக்கிறது. எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. எனவே, தொண்டர்கள் அமைதியாக இருங்கள். அதிமுகவினர் நம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வருவார்கள். விஜயகாந்த் தேர்தல் நேரத்தில் கிளைமாக்ஸில் கண்டிப்பாக வந்து உங்களிடத்தில் பேசுவார். அவருக்கு வயதாகிவிட்டது. 40 வருடம் பேசிவிட்டார். தேமுதிக கூட்டணி முடிவெடுத்ததற்கு தொண்டர்களாகிய நீங்கள்தான் காரணம். நீங்கள் செயற்குழு, பொதுகுழுவில் எடுத்த முடிவால் கூட்டணிக்கு ஒத்துக்கொண்டோம். சென்னை மண்டலத்தில் 6 தொகுதிகளில் ஏற்கனவே வென்றுள்ளோம். மீண்டும் வெற்றி பெற்றால்தான் நமக்கு எதிர்காலம். இந்த தேர்தலில், திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் புதிதாக தேர்தலை சந்திக்க உள்ளது. அதிமுகவிற்கு தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. அவர்கள் ஜெயித்தால்தான் எதிர்காலம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *