பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா

பெங்களூரு தேவனஹள்ளி விடுதியில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை புறப்பட்டார்.

சென்னை, பிப்-8

பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ந்தேதி சசிகலா விடுதலை ஆனார். அந்தநேரம் கொரோனா பாதிப்பு காரணமாக, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம், சிறைத்துறை நிர்வாகம் சார்பில் நேரடியாக அதிகாரிகள் சென்று விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர்.

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தார். இதையடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி, அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனார். ஆனாலும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற டாக்டர்கள் அறிவுரையின்படி, பெங்களூருவில் உள்ள தேவனஹள்ளி விடுதியில் சசிகலா தங்கி ஓய்வு எடுத்தார்.

இந்தநிலையில் அவர் இன்று சென்னை திரும்புகிறார். பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா தமிழகம் புறப்பட்டார். அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும் அதிகமுக கொடியுடன் தமிழகம் புறப்பட்டார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை ஆன இளவரசியும் காரில் சென்னை திரும்புகிறார்.

பெங்களூருவின் தேவனஹள்ளியிலிருந்து சென்னை புறப்பட்ட சசிகலாவுக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர். டிடிவி தினகரன், ஜெய் ஆனந்த் உள்ளிட்டோர் சசிகலாவை காரில் அழைத்து வருகின்றனர்.

சென்னை வரும் சசிகலாவுக்கு தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம் வரை சாலையின் இருமருங்கிலும் அமமுகவினர் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க உள்ளனர்.

இதற்கிடையே தமிழகம் வரும் சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சசிகலா வாகனத்தை 5 வாகனங்கள் மட்டுமே பின் தொடர வேண்டும், பட்டாசு வெடிக்கவும், இசை வாத்தியங்கள் வாசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேனர்கள், தோரணங்கள் அனுமதியின்றி வைத்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *