அதிகமாக பொய் பேசும் தலைவர் ஸ்டாலின்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி

திருவள்ளூர், பிப்-7

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி கடந்த டிசம்பர் மாதமே எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். ஏற்கனவே முதல் கட்ட பிரசாரத்தை முடித்த அவர் தற்போது இரண்டாவது கட்டமாக மீண்டும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த மாதம் (ஜனவரி) 20 மற்றும் 21 ஆகிய இரு தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்தார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். காலை 9 மணியளவில் போரூரில் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திறந்த வேனில் நின்றபடி உரையாற்றி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்திற்கு பதிலடி கொடுத்தார்.

‘நான் சொல்வதையே முதல்வர் செய்கிறார், என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நான் செய்வதைத் தான் ஸ்டாலின் சொல்கிறார். கடைசி வரை திமுக சொல்லிக்கொண்டே தான் இருக்கப்போகிறது. செய்யும் இடத்தில் அதிமுக இருக்கப்போகிறது. விவசாயிகள் படும் சிரமங்கள் என்ன? என்பது எனக்கு தெரியும் என்பதால் விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம். தேர்தல் வருவதற்கு முன்பே திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவதுதான் அதிமுக அரசு’ என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் கடை வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;-

பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலை, கடல் போல காட்சி அளிக்கின்றது. இந்த எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பொதுக்கூட்டத்திலிருந்து நன்றாக தெரிகின்றது மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும் என்பதில் அச்சமில்லை.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் பல இடங்களுக்குச் சென்று திண்ணையில் பாய் விரித்து அமர்ந்து கொண்டு, அவர்கள் சொல்லி கொடுத்த பெண்களிடம் குறைகளை கேட்பது போல் நாடகம் நடத்தி வந்தார். அந்த நாடகத்தை தற்போழுது மாற்றி விட்டார். ஏனென்றால் அவர்கள் அழைத்து வருகின்ற தாய்மார்கள் கேள்விகளை மாற்றிக் கேட்பதால் ஸ்டாலினால் பதில் கூற முடியவில்லை. தற்பொழுது நாடகத்தை மாற்றி பெட்டியை தூக்கிக் கொண்டு செல்கிறார்.
தி.மு.கவிற்கு பெட்டி வாங்கித்தான் பழக்கம். அதனால் தான் பெட்டியை எடுத்துக் கொண்டு செல்கின்றனர். இங்குள்ள மக்களின் எழுச்சியை பார்க்கின்ற போது தி.மு.க எப்பொழுதும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை பார்க்க முடிகின்றது. கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு, ” “எருமை ஏரோப்பிளேன் ஓட்டுகிறது” என்று, அது போல 100 நாள்களில் அனைத்து மக்களின் கோரிக்கையையும் நிறைவேற்ற முடியுமா, நடக்கின்ற காரியமா. அப்படியென்றால் நீங்கள் துணை முதலமைச்சராக இருந்தபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.

தி.மு.க 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லை. எவ்வளவு பொய் வேண்டுமென்றாலும் பேசி. ஆட்சியைப் பிடித்துவிட துடித்துக் கொண்டிருக்கிறார். இந்திய நாட்டிலே அதிகமாக பொய் பேசுகின்ற ஒரே தலைவர் ஸ்டாலின்தான். ஆனால் அண்ணா தி.மு.க அப்படி அல்ல. 2011 தேர்தலில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் மாண்புமிகு அம்மா அவர்கள் நிறைவேற்றினார்கள்.

தி.மு.கவினர் தற்போது 7 பேர் விடுதலையில் நாடகமாடி வருகின்றனர். தி.மு.க ஆட்சியில் பேரறிவாளனை பரோலில் விடவே இல்லை. ஆனால், நான் முதலமைச்சராக இருக்கின்ற போது, பேரறிவாளன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், பேரறிவாளன் தாயாரின் கோரிக்கையினை ஏற்று 2 முறை பரோலில் விட்டேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *