தமிழக மக்கள் என்னை சரியாக அங்கீகரிக்கவில்லை.. வருத்தப்பட்ட தமிழிசை

சென்னை, பிப்-7

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப் பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற தையொட்டி அவரது பணிகள், பயணங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூல் வெளியீட்டு விழாவும், பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் சென்னையில் நேற்று நடந்தது. பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய தமிழிசை பேசியதாவது:-

“நான் தமிழ் மகள். அதன்பிறகுதான் தெலங்கானா சகோதரி. இங்கே எல்லோருடைய அன்பையும் சேர்த்து வைத்த கொண்டுதான் தெலங்கானாவுக்கு சென்றேன். என்னை ஆளுநராக அறிவித்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆளுநராக என்னை அறிவிப்பார்கள் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.

இந்தியாவிலேயே முதன் முறையாக ஓர் இளையவர் எப்படி மாநிலத்தின் ஆளுநராக செயல்படுவார் என்று பல்வேறு விமர்சனங்கள் பொறுப்பேற்ற முதல் நாளே வந்தது. ஆனால், கொரோனோ காலகட்டத்தில் தெலங்கானா ராஜ்பவனை மக்கள் பவனாகவே இருந்தது. எனக்கு தமிழக மக்களிடமும் சின்ன ஆதங்கம் உள்ளது. தமிழ் மக்கள் என்னை சரியாக அங்கீகரிக்கவில்லை என்ற வருத்தம் இன்றளவும் உண்டு.

புகழ்பெற்ற அரசியல் தலைவரின் மகள், புகழ்பெற்ற மருத்துவரின் மனைவி, புகழ்பெற்ற மருத்துவர் என்ற அடையாளத்துடன் அரசியலில் அடியெடுத்து வைத்தேன். என் குடும்பத்தினர் இருந்த அரசியல் கட்சிக்கு நேர்எதிரான கட்சியில் சேர்ந்தேன். இதனால் என் மீது குடும்பத்தினர் கடும் கோபத்தில் இருந்தனர். ஓராண்டுக்கு குடும்ப நிகழ்ச்சி களுக்குகூட என்னை அழைக்கவில்லை. அப்போது எனக்கு உறுதுணையாக இருந்தவர் எனது கணவர் சவுந்தரராஜன்.

பெண்கள் அரசியலில் சாதிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.பல்வேறு சோதனைகள், அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். என் அரசியல் வாழ்வில்தூங்காத இரவுகள் அதிகம். அப்போதெல்லாம் எனக்கு தைரியம் ஊட்டியவர் என் கணவர்தான்.

ஆளுநர் ஆவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆண்டவன் நினைக்காமல் வாழ்வில் ஒரு நொடிகூட நகராது என்பதுஎன் நம்பிக்கை. ஆண்டவரும், ஆள்பவர்களும் எனக்களித்த ஆளுநர் பணியை திறம்பட செய்திருக்கிறேன். மக்கள் பணியே என் வாழ்க்கை. அதை உணர்ந்துதான் அரசியலுக்கு வந்தேன். ஆளுநராகவும் மக்களுடனேயே இருக்கிறேன். அவர்களுக்காக பணியாற்றுகிறேன். மக்களுக்காக பணியாற்றுவதுதான் என் வாழ்க்கை.

அடுத்த நாளை பற்றி நான் கவலைப்படுவதில்லை. இன்று எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்வதுதான் எனது வழக்கம்.

ஆளுநர் என்பதைவிட அக்கா என்றுதான் பெரும்பாலும் என்னை அழைப்பார்கள். ஆளுநர் என்ற எண்ணம் என் மனதில் எப்பொழுதுமே இருந்ததில்லை. பாஜகவில் அதிக நாட்கள் தலைவராக இருந்தவர் என்ற பெருமை என்னை மட்டுமே சேரும். என்னை குள்ளம் என்று சொன்னார்கள். ஆனால், என் எண்ணத்திலும் உள்ளத்திலும் உயர்ந்துதான் இருக்கிறேன். சுருட்டை முடி என்றார்கள். என் முடிதான் சுருட்டை. ஆனால், நான் எதையும் சுருட்டவில்லை.”

என்று தமிழிசை செளந்திரராஜன் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *