சசிகலா சென்னை வருகை.. அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு…!

பெங்களூருவில் இருந்து சசிகலா, நாளை சென்னைக்கு வரவுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை, பிப்-7

சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27ம் தேதி விடுதலையானார். விடுதலை நெருங்கிய நேரத்தில் அவர் கொரோனாவின் பிடியில் சிக்கி, மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தார்.

தற்போது மருத்துவர்கள் அறிவுரையின்படி பெங்களூருவில் உள்ள தனியார் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் ஒரு வாரம் தனிமை முடிந்து, சசிகலா பெங்களூருவில் இருந்து நாளை புறப்பட்டு சென்னை திரும்புகிறார். சசிகலாவுக்கு தமிழக-கர்நாடகா எல்லையில் இருந்து வழிநெடுக வரவேற்பு அளிக்கப்படும் என்று அ.ம.மு.க. பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் அதிக எண்ணிக்கையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களின் குடியிருப்புகள் உள்ள கிரீன்வேஸ் சாலை பகுதியில், சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் ராஜமாதாவே வருக என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

ஓய்வுக்குப்பின் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் சசிகலா, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவாா். பின்னர் அதிமுக தலைமை அலுவலகம் செல்லலாம் என கூறப்படுகிறது.

பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பும் சசிகலா, தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தனது அண்ணண் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் சசிகலா தங்க உள்ளதாகவும் அவர் தங்குவதற்காக அந்த வீட்டில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம், நினைவு இல்லத்திலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *