சசிகலா வருகையால் அமைச்சர்கள் ஏன் இந்த அளவுக்கு பதற்றமடைகிறார்கள்?..டிடிவி தினகரன் கேள்வி

சசிகலாவை வரவேற்க அனைவரும் தயாராகி வரும் நிலையில் அமைச்சர்கள் ஏன் இந்த அளவுக்கு பதற்றமடைகிறார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, பிப்-6

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; சசிகலாவை வரவேற்க அவர்களின் மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர் பதவியிலிருப்பதையும் மறந்து, நிதானமின்றி உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்கள். அதிகாரத்திலுள்ள இவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளையும்,டி.ஜி.பி.யிடம் மீண்டும் மீண்டும்தரும் பொய்புகார்களையும் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கைச்சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு, அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

மேலும், அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தின் மீதான உரிமை தொடர்பாக சின்னம்மா அவர்களால் தொடரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை, வசதியாக மறைத்துவிட்டு இவர்கள் பேசி வருகிறார்கள். இவர்களின் பேச்சையெல்லாம் மக்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்களும் முகம் சுழித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *